ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும்? - காஸ்ட் கம்மி வீடு ! எழுத்தாளர் , ஜெயமோகன்

23 ஜனவரி 2024   05:30 AM 22 அக்டோபர் 2018   11:02 AM


லாரிபேக்கர் சொல்படி வீடு கட்ட முடியுமா?

லாரிபேக்கரிடம் காந்தி சொன்னார், எது குறைவான சரக்குப் போக்குவரத்துச் செலவுடன் அமைந்துள்ளதோ அதுவே நல்ல வீடு என்று. அந்த ஒற்றைவரியிலிருந்து பேக்கர் பாணி இல்லங்கள் உருவாயின. பேக்கர் கண்ட கனவு என்பது இந்தியாவின் சாதாரண மக்கள் அவரது பாணியில் இல்லங்களை உருவக்கிக்கொண்டு அதன் வழியாக இங்கே குடியிருப்புகளில் ஒரு தன்னிறைவு உருவாகும் என்று ஆனால் காந்தியம் பேக்கரின் கண்முன்னாலேயே இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தால் கைவிடப்பட்டது. பேக்கரின் குரலை நேருயுக இந்தியா செவிமடுக்கவில்லை. குமரப்பா போல, வினோபா பாவே போல அவரும் ஒதுக்கப்பட்டார். ஆனால் பேக்கர் ஒரு நடைமுறை அறிவியலாளர். ஆகவே தன் வீடுகளை அவர் அறிவியல் பூர்வமாகவும் நிரூபித்துக்கொண்டே இருந்தார். இருந்தும் அவரது சோதனை வீடுகளை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

 

காரணம் இந்தியாவில் வீட்டுவசதியைப் பெருக்க முயன்ற அரசுகள் அந்தப் பொறுப்பை காண்டிராக்டர்களிடமும் அதிகாரிகளிடமும்தான் கொடுத்தன. அவர்கள் தங்களுக்கு லாபம் வரும் முறையை மட்டுமே கடைப்பிடித்தனர். ஒரு பேக்கர் பாணி வீடு ‘செலவுகுறைந்த’ வீடு என முத்திரையிடப்பட்டது. அதில் மேலும் செலவைக் குறைத்து லாபம் பார்க்க முடியாது. ஆகவே பேக்கர்பாணிவீடுகள் உறுதியற்றவை என்று நிராகரிக்கப்பட்டன. அரசு கட்டிய கான்கிரீட் வீடுகள் முழுக்க உடைந்து ஒழுகிக் கறுத்துக் கைவிடப்பட்டு நம் தேசம் முழுக்க வீணாகிக்கிடக்கின்றன. முப்பபதாண்டுக்காலம் தாங்கும் அரசுக்கட்டிடம் என ஏதும் இல்லை.

 

விளைவாக பேக்கரின் செல்வாக்கு அறிவுஜீவிகளிடம் மட்டுமே நிகழ்ந்தது அவர்கள் அந்தப்பாணியை ஓர் அழகியலாக வளர்த்தெடுத்தனர். ஓவியர்களும் கலைஞர்களும் அந்த பாணி வீட்டை கட்டிக்கொள்ள ஆரம்பிக்க அதை செல்வந்தர்கள் பின்தொடர்ந்தனர். பேக்கர்பாணி இன்று பங்களாக்களுக்குரிய, குறிப்பாக ஓய்வுபங்களாக்குரிய ஒன்றாக அங்கீகாரம் பெற்றுவிட்டிருக்கிறது.

 

லாரிபேக்கர் பாணி என்றதுமே சுட்டசெங்கல்லை சீராக அடுக்கி நிறைய வளைவுகளுடன் கட்டுவது என்று பரவலாக நம்பப்படுகிறது. உண்மையில் கேரளத்தில் நல்ல களிமண் கிடைப்பதனால் பேக்கர் அந்தப்பாணியை அங்கே கொண்டுவந்தார். அது ஒரு விதி அல்ல. உள்ளூரில் எது கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தவேண்டும் என்பதே பேக்கரின் கொள்கை.

 

உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் பனைமரத்தடி மிக மலிவானது. அது உறுதியானதும்கூட. ஆனால் நாம் இன்று நம் கட்டிடங்களில் அதை பயன்படுத்துவதேயில்லை. தமிழகத்தில் உறுதியான கருங்கல் நிறையக் கிடைக்கிறது. கருங்கல் தொழிலாளர்களும் உண்டு. ஆனால் நாம் கருங்கற்களைப் பயன்படுத்துவதில்லை

 

சிமிண்டுக்குப் பதிலாகக் கூடுமானவரை காரையைப் பயன்படுத்தலாம் என்பது பேக்கர் அடிக்கடி கூறிவந்தது. நீரை நேரடியாக சுவர் மீது வழியவிடாமலிருந்தால் காரை மிகமிக வலுவானது. அவர் காரை சிமிட்டை விட வலுவானது என்று சொன்னபோது நான் நம்பவில்லை. ஆனால் நூறாண்டுக்கால காரைவீடுகள் வலுவாக நீடிக்கின்றன. ஐம்பதாண்டுக்கால சிமிண்ட் வீடுகள் உதிர்கின்றன என்பது ஓர் யதார்த்தம்

 

தமிழகத்தில் ஒரு பேக்கர் பாணிக் கட்டிடம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு உதாரணமான ஒரு கட்டிடத்துக்கு சென்ற அக்டோபர் 27 அன்று செல்ல நேர்ந்தது. மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீ மற்றும் உத்தரகுமாரின் இல்லத்தில் திறப்புவிழாவுக்கு. என் நண்பரும் பதிப்பாளருமான பவா செல்லத்துரையின் மனைவி ஷைலஜாவின் தமக்கை ஜெயஸ்ரீ. ஆசிரியையாக இருக்கிறார். திருவண்ணாமலையின் புறநகரில் அரை ஏக்கர் நிலத்தில் அழகாகக் கட்டப்பட்டுள்ளது ஜெயஸ்ரீயின் வீடு.

 

வீடு என்பதைவிட பங்களா என்றுதான் சொல்லவேண்டும், 2500 சதுர அடி பரப்பு கொண்டது. பேக்கர்பாணிக் கட்டிடவரைவாளர் பிஜு பாஸ்கரன் அதை வடிவமைத்தார். முதலில் செங்கல்லால் ஆன வீடுதான் அவரது திட்டம். ஆனால் நிலத்தில் நிறைய கற்கள் கிடைக்கவே கல்லாலேயே கட்டும்படி திட்டத்தை மாற்றினார். திருவண்ணாமலையே விதவிதமான கற்களுக்குப் புகழ்பெற்றது. அந்த மலை ஒரு தொன்மையான எரிமலை. மஞ்சள், இளஞ்சிவப்பு ,சாம்பல் நிறமான கற்களை நுட்பமாக அடுக்கிக் கட்டப்பட்ட சுவர்கள் ஜெயஸ்ரீயின் வீட்டின் சிறப்பு.
 

முக்கியமாக வீட்டின் செலவை 20 சதவீதம் வரை குறைத்துவிட்டது இந்த சுவர். வீடு கட்டுபவர்களுக்குத் தெரியும். வீட்டின் பெரும் செலவென்பது சுவரில் சிமிண்ட் பூசி அதன் மேல் புட்டி அடித்து அதன் மேல் பெயிண்ட் அடித்து அழகான சுவராக ஆக்குவதுதான் என. இந்த வீட்டுச்சுவரில் கற்களின் அழகுதான் முக்கியம். மேலே எந்தப்பூச்சும் கிடையாது.

 

இரண்டாவதாக திருவண்ணாமலைபோலக் கடுமையான வெப்பம் நிலவும் பகுதிகளில் கனத்த கற்சுவர் மிகமிகக் குளிர்மை கொண்டதாக இருக்கும். கற்சுவர் வெப்பத்தையும் குளிரையும் உள்ளே விடாது. வெள்ளையர் காலக் கட்டிடங்கள் எல்லாம் கல்லால் ஆனவையாக இருக்கக் காரணம் இதுவே.
கடைசியாக, ஆனால் முக்கியமாக , சுவரில் உருவாகும் இயற்கையான அழகு பரவசமூட்டுவது. ஓர் ஓவியப்பரப்புக்குள் குடியிருப்பதுபோல பிரமை எழுப்புகிறது அது. வீடு முழுக்க ஒரு கம்பீரமான விரிவு நிறைந்திருப்பதாக உணரச்செய்கிறது

 

வீட்டுக்குள் வரும் ஒளியை முழுமையாக எதிரொளிக்கக்கூடியதாக நாம் நம் சுவர்களைப் பொதுவாக அமைக்கிறோம். அதன்பின் பாதி சன்னல்களை மூடி வைக்கிறோம். அதிக ஒளி உள்ளே வந்து அது சுவர்களால் உண்ணப்படும் விதமாக வீடு அமையவேண்டும் என்றார் பேக்கர். அதை ஜெயஸ்ரீயின் இல்லத்துச் சுவர்களில் காணலாம்.

 

ஏற்கனவே பவா செல்லத்துரை அவரது வீட்டின் பாதியை இதே பாணியில் கட்டியிருக்கிறார். அந்த முறையின் வசதியையும் அழகையும் கண்ட பின்னரே இதை ஜெயஸ்ரீ ஒத்துக்கொண்டிருக்கிறார்

 

பேக்கர் பாணி இல்லங்களில் சட்டங்களையும் தூண்களையும் தவிர்க்க கேரளத்தில் செங்கல் வளைவுகளை அதிகமாகப் பயன்படுத்துவதுண்டு. இங்கே கல் அதிகமாக கிடைப்பதனால் கருங்கல்தூண்களும் கருங்கல் சட்டங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

சமீபத்தில் நான் சென்றுவந்த வீடுகளில் அழகானதும் வசதியானதுமான வீடு இதுதான். வாழ்வது ஒரு கலை, வீடு அந்தக்கலையின் ஒரு பகுதியாகிய இன்னொரு கலை.

 

By Jayamohan

Buildersline Monthly

 

www.buildersline.in

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067327