உலகளவில் தனித்திறன் காட்டிய இந்திய கட்டுமானத் தொழிலாளி
உலகில் அதிக வேலைவாய்ப்பைத் தரும் துறைகளுள் முதன்மையானது கட்டுமானத்துறை என்பது எத்தனை உண்மையோ அதுபோல உலகில் அதிகளவிற்கு இடம் பெயரும் மக்களின் பெரும்பான்மையான இலக்கும் கட்டுமானப் பணியாகத்தான் இருக்கிறது. உலகெங்கும் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின் படி, 2010 முதல் 2015 வரை ஏறத்தாழ 47 கோடி மக்கள் கட்டுமானப்பணி வேலைவாய்ப்பிற்காக கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து சென்றிருக்கிறார்கள்.
இப்படி இடம்பெயரும் கட்டுமானத் தொழிலாளர்களில் திறமையை அதிகரிக்க நம்நாட்டில் இதுவரை எந்த அரசு, தனியார் அமைப்புகளும் முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. ஆனால் வளைகுடா நாடுகள் அப்படியில்லை. கட்டுமானத் தொழிலாளர்களில் திறன் அறியச்செய்யும் வகுப்புகளும் போட்டிகளும் நடத்துகின்றன். அதில் ஒரு போட்டியில் இந்திய கட்டுமானத்தொழிலாளி ஒருவர் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
அவர் பெயர் ரோஹிம் மாம்.
எங்கேயோ கிடந்த ஒரு கட்டுமானத்தொழிலாளி எப்படி அபுதாபியில் நடந்த ஒரு உலக அளவிலான போட்டியில் பங்கேற்றார்? எப்படி வெற்றியும் பெற்றார்? அது என்ன கட்டுமானத் தொழிலாளரின் திறன் அறியும்
போட்டி? வாருங்கள். விரிவாகக் காண்போம்
இந்தியா ஒரு வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருப்பதற்கு முக்கியக் காரணமே மலிவு விலையில் தொழிலாளர்கள் கிடைப்பதுதான். அப்படிப்பட்ட தொழிலாளர்கள் எப்படி உருவாகிறார்கள்? இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தொலைதூரங்களில் இருந்து புதிய நகரங்களுக்குக் குடி பெயர்ந்தவர்கள்.
ரோஹிம் மாமின் வாழ்க்கைப் பயணமும் இதே போன்றதுதான். குடும்பத்தைப் பராமாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதால் பள்ளிப்படிப்பை இடை நிறுத்தம் செய்து மால்டா என்கிற தனது கிராமத்தில் இருந்து கட்டுமானப் பணியாளராகப் பணிபுரிய டெல்லிக்குக் குடிபெயர்ந்தார்.
அதிக வருமானம் ஈட்டவேண்டும் என்பதிலும் தனது மூன்று தங்கைகளுக்கும் சிறப்பான வருங்காலத்தை அமைத்துத் தரவேண்டும் என்பதிலும் இருந்த மன உறுதியே அவரை உடலுழைப்புடன்கூடிய பணியைத்
தாண்டி செயல்படத் தூண்டியது. இந்தத் தூண்டு தலே அவர் திறன் பயிற்சி பெறவும் கட்டுமானத்
திறனை மேம்படுத்திக் கொள்ளவும் அபுதாபியில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற உலக திறன் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்கவும் உதவியது.
ரோஹிம் மால்டா பகுதியில் பிறந்து வளர்ந்தார். இவரது பெற்றோர் சாலை விபத்தில் இறந்தபோனதால் பதினோறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு மூன்று தங்கைகள் அடங்கிய இவரது குடும்பப் பொறுப்புகளை முழுமையாக ஏற்றுக்கொண்டார். கட்டுமானத் துறை
யில் தொழிலாளியாக சேர்ந்தார்.
''எங்களது கிராமத்தில் இருந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மக்களை பணியாட்களாக டெல்லிக்கு அழைத்துச் செல்வார். இவரது அறிமுகம் கிடைத்து நான் இவருடன் டெல்லிக்கு வந்தேன். என்னுடைய கிராமத்தைச் சேர்ந்த சுமார் 80 சதவீதம் பேர் கிராமத்திற்கு வெளியே கட்டட வேலையில் ஈடுபட்டுள்ளனர்," என்றார் 22 வயதான ரோஹிம்.
ஆரம்பத்தில் சிமெண்ட் கலவைகளை தீர்மானிப்பதற்கு மேற்பார்வை யாளரின் அறிவுறுத்தல்களையே பின்பற்றி உடலுழைப்பில் மட்டுமே இவர் கவனம் செலுத்தி வந்தார். சில நாட்களிலேயே கொத்தனார் அதிகம் சம்பாதிப்பதை இவர் உணர்ந்தார். பணத்தின் மீதான இந்த ஈர்ப்பு இந்தத் துறையை சிறப்பாகப் புரிந்துகொண்டு பணிக்கு சேர்ந்த ஓராண்டில் இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற
தூண்டுதலை ஏற்படுத்தியது. அந்த வேலையை கூர்ந்து கவனித்தார்.
ஒரு நாள் கட்டுமான தளத்தில் சில தொழிலாளர்கள் அபுதாபியில் கட்டுமானப் பணி தொடர்பான ஒரு போட்டி நடக்க இருப்பது குறித்து பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டார். போட்டியில் கொடுக்கப்படும் பணி
களை குறிப்பிட்ட நேரத்தில் நிறைவு செய்யும் நபருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என பேசிக்கொண்டனர். ரோஹிமுக்கு ஆர்வம் ஏற்பட்டது. உடனே இந்தப் போட்டியில் கலந்துகொண்டார். முதற்கட்டமாக டெல்லி என்சிஆர் பகுதி முழுவதும் இருந்து கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் இரண்டாவது இடம் பிடித்தார்.
”நிறுவனத்தின் தரப்பிலிருந்து நான்கு மணி நேரத்திற்குள் ’எச்’ வடிவிலான ஒரு மீட்டர் உயர சுவற்றை உருவாக்கச் சொன்னார்கள். இதற்கு ஒட்டுமொத்த உடலுழைப்பும் கவனமும் தேவைப்படும். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே எனக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. ஆனால் நேரத்தை வீணாக்க மனமின்றி தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்துவிட்டேன். குறிப்பிட்ட நேரத்தில் துல்லியமாக பணியை நிறைவு
செய்வதே வெற்றிக்கான முக்கிய அம்சமாகும்,” என்றார் அவர்.
குறிப்பிட்ட பகுதிக்கான திறன் போட்டிக்குப் பிறகு தேசிய அளவில் போட்டியிட்டு தேசிய திறன் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தார். அதன் பிறகு உலக திறன் போட்டியில் போட்டியிட தேர்வானார். இதற்காக பதினான்கு மாதங்கள் புனேவில் உள்ள கிரடாய் பயிற்சி பட்டறையில் தன்னை தயார்படுத்திக்கொண்டார்.
கட்டுமானப் பணித்திறன் ஒரு வீடு அல்லது கட்டிடத்தின் கட்டுமானப் பணி என்பது நம் கண்முன் காட்சிப்படுத்தப்படும் அம்சத்தை மட்டுமே உள்ளடக்கியதாக கருதப்படுகிறது. திட்டத்திற்கு ஏற்றவாறு துல்லியமாகவும் நேர்த்தியாகவும் கட்டுவது கட்டுமானப் பணியாளரின் முக்கிய பொறுப்பாகும். ரோஹிம் 59 நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் போட்டியிட வேண்டியிருந்தது. இதில் வரைபடங்களை விளக்கி, அளவிட்டு உலகத் தரம் வாய்ந்த கட்டுமானத்தை கட்டவேண்டியிருந்தது.
இந்தப் போட்டி அவரது திட்டமிடல் திறன்களை சோதித்தது. திருத்தம், துல்லியம், நேர்த்தி, நுணுக்கங்களில் கவனம் செலுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அவரது கட்டுமானம் மதிப்பிடப்பட்டது. அபுதாபியில் மணல், சுண்ணாம்பு, சிமெண்டு போன்ற வௌ;வேறு பொருட்களால் ஆன கற்கள் மற்றும் ப்ளாக்குகளைப் பயன்படுத்தி ரோஹிம் கட்டுமானம் செய்தார். இதில் ’ஃபால்கன் டிசைன் ’
அலங்கார கட்டுமானமும் இடம்பெற்றிருந்தது.
ரோஹிம் ’மெடாலியன் ஆஃப் எக்ஸலன்ஸ்’ வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தர்.
“முடிவுகளைக் கண்டு மிகுந்த ஏமாற்றமடைந்தேன். எனினும் எனக்கு கிடைத்தது நினைத்து நான் மகிழ்கிறேன். என்னிடம் நல்ல வேலை உள்ளது,” என்றார்.
வளர்ந்த நாடுகளில் மொத்த தொழிலாளர்களில் 60 முதல் 90 சதவீதம் பேர் திறன்பெற்ற தொழிலாளர்கள் ஆவார்கள். இதற்கு மாறாக இந்தியாவில் முறை யான தொழிற்பயிற்சி திறன்களுடன்கூடிய தொழிலா ளர்கள் 4.69 சதவீதம் மட்டுமே இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடைபாதை, சுவர், வீடு என எங்கு கட்டுமானப் பணி நம் பார்வையில் பட்டாலும் அதில் அதிக நிபுணத்துவமும் திறனும் அடங்கியுள்ளது. தொடர்பு, படைப்பாற்றல் மற்றும் வடிவமைப்பு, சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், துல்லியம் ஆகியவற்றில் கட்டுமானப் பணியாளருக்கு இருக்கும் திறனுக்கு கட்டிடங்களே சான்றாகும்.
"வெளிநாடுகளில் கட்டுமானப் பணி தொடர்பான தொழில்முறை பாடங்கள் கல்லூரியில் உள்ளது. அத்துடன் அவர்கள் கட்டுமானப் பணியைத் தொழில் வாய்ப்பாகவே கருதுகின்றனர். எனினும் இந்தியாவில் முக்கியத் தேவை இருப்போர் மற்றும் ஏழ்மையில் இருப்போருக்கான பணியாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தப் பணியை பார்க்கும் கண்ணோட்டமே வேறுபட்டுள்ளது,” என்றார் ரோஹிம்.
போட்டியில் பங்கேற்ற பிறகு தனது சக பணியாளர் களிடையேயும் கிராமத்திலும் ரோஹிமிற்கு தற்போது மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. மிக முக்கியமாக அவருக்கு ஏடிஎஸ் கன்ஸ்ட்ரக்~ன்ஸ் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் ஃபோர்மேன் பணி கிடைத்துள்ளது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச திறன் போட்டிகளில் பங்கேற்க உள்ளவர்களுக்கு பயிற்சியாளராகவும் உள்ளார்.
”எந்தப் பணியும் உயர்வானதோ தாழ்வானதோ இல்லை. அதை நீங்கள் எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒவ்வொருவரும் மனதார முழு ஈடுபாட்டுடன் பணிபுரியவேண்டும். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்,” என்றார்.
அவருக்கு பில்டர்ஸ் லைன் வாழ்த்துக்கள்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2140762
|