உலகின் எப்பகுதியையும் விட, நீர் மேலாண்மையின் உச்சம் தொட்டவர்கள் நம் முன்னோர்கள். நமது நாகரிகமும், வாழ்வு முறையும் ஆறுகளையும், ஏரிகளையும் சுற்றிப் பின்னிப் பிணைந்து தான் இதுகாறும் வந்திருக்கிறது. இயற்கையிலேயே பூகோள அடிப் படையின் படி மேற்குத் தொடர்ச்சி மலையின் அமைவிடம் காரணமாகதெற்கே இந்தியப் பெருங்கடல் மற்றும் கிழக்கே அரபிக்கடல் ஆகியவற்றில் உண்டாகும் மேகத்தொகுப்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் தான் முட்டி நிற்கும். மழையாக பொழியும். சேர நாட்டில் பொழிகிற அந்த தென்மேற்கு பருவக்காற்று மழையில் ஒரு சிறு சதவீதம் தான் இந்தப்பக்கம் தமிழகத்தில் காட்டும். மழை மறைவு பிரதேசமான தமிழகத்திற்கு வங்காள விரிகுடா தருகிற வடகிழக்கு பருவமழை எல்லா ஆண்டும் கருணை காட்டும் என சொல்ல முடியாது. ஆந்திராவுக்கும், அஸ்ஸாம், ஒடிசாவுக்கும் போக மிச்சம் நமக்கும் கிடைக்கலாம், கிடைக்காது போகலாம். வந்தால் புயல். பேய்மழை அதன் காரணமாக வெள்ளம்., வராது போனால் வரலாறு காணாத பஞ்சம்.. இப்படித்தான் தமிழகம் நெடுங்காலமாக வான் நீரோடு உறவு கொண்டிருக்கிறது.
இதெல்லாம் கருத்தில் கொண்டு தான் நம்மை ஆண்ட மூவேந்தர்கள் ,மற்ற பெருமன்னர்கள் தங்களுக்குள் போரில்லாத சமயம் நாடு முழுதும், அணைகளைக் கட்டி, ஏரிகளை. உருவாக்கி, ஏனைய நீர்நிலைகளை சீரமைத்து என்றோ வரும் மழைக்கு தவமிருந்தார்கள். இன்று இந்தியா முழுக்க உள்ள பல்வேறு அணைகளில் பல தொன்மை காலத்தில் கட்டப் பட்டிருப்பதன் மூலமே நம் தமிழ் மன்னர்களின் நீர் மேலாண்மை நுண்ணஷீவு நமக்கு விளங்கும். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை அவர்கள் தெள்ளத்தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்கள்.
ஆனால், இன்றைய மக்கள் ஆட்சியில். காவிரியில் கைக்கு வந்த 95 டிஎம்சி நீரை சேமித்து வைக்க வழியில்லாமல் கடலில் விட்டு, ‘இது கர்நாடகா நமக்கு நமக்கு தந்த பங்கீட்டு நீரல்ல, உபரி நீர், எனவே தான் நம்மால் சேமிக்க முடியவில்லை’ என ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள்.
காவிரியில் வெள்ளம், ஆனால், தஞ்சை, நாகையில் கடைமடையில் வறட்சி.. இந்த விநோதங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தான் நடக்கும். கோடையில் சும்மா இருந்து விட்டு, மழைக்காலத்தில் ஆறு, கால்வாய், ஏரிகளை தூர்வாரத் தொடங்கும் மண்ணாங்கட்டி மூளை அதிகாரிகள் பொறுப்பில் இருக்கும் வரை கடைமடையில் தண்ணீர் வராது, கடைக்கோடி மனிதனின் வயிற்றில் ஈரம் படியாது.
காவிரிக்காகப் போராடாத தமிழனே இந்த மாநிலத்தில் இல்லை என்னும் போது, காவிரியில் இயற்கை தந்த நீரை, கடலில் வீணே கலக்க விடுவது எத்தனை அலட்சியம்? எத்தனை பொறுப்பற்ற தன்மை? நல்ல நீரை கடலில் கலக்க விட்டு, பின்பு அந்த கடல்நீரையே குடிநீராக்கும் மடமைத்தனம் உலகில் வேறெங்காவது நடக்கிறதா?
‘மதகு உடைந்தன, ஷட்டர்கள் பெயர்ந்தன, கதவுகள் பாழடைந்து விட்டன.. அணைகளின் கரை உடைப்பெடுத்து விட்டன’, என செய்திகள் வருகின்றன. ‘இதுபோல பெருவெள்ளத்தை எதிர்பார்க்கவில்லை’
என்கிறார்கள். அப்படியெனில், நீர்வளத்துறையில் அதிகாரிகளும், ஊழியர்களும் என்ன தான் செய்து கொண்டிருந்தார்கள்?. நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட எல்லா அணைகளையும் மறு சீரமைக்க இப்போது தான் உத்தரவு வந்திருக்கிறது. கூண்டில் இருந்த தங்கக் கிளியைப் பறக்க விட்டு, விட்டு இப்போது கூண்டுக் கதவை எந்த டிசைனில் செய்யலாம் என விவாதிப்பது எத்தனை பொருந்தாத செயல்?.
‘வரப்புயர’ என வாழ்த்திய ஔவை வாழ்ந்த மண்ணில் தான் , இந்த கடை மடை வறட்சி தாண்டவம். இப்போதய ஆட்சியாளர்களுக்கு ஔவையும் தெரியாது, நீர் மேலாண்மையும் தெரியாமல் போனது தான் சோகம்.
பில்டர்ஸ்லைன் இம்மாத தலையங்கம்..
இதழ் முழுதும் படிக்க....
www.buildersline.in