‘கீழ்த் தளத்தில் என்ன இருக்கு?'
நிலவறைத் தளங்களைக் கட்டுவதில் கட்டிட விதிமுறைகள் எப்படி மீறப்படுகின்றன?
மழை வெள்ளம் வடிந்து பதினைந்து நாட்கள் ஆன பின்னரும், சென்னையின் பிரதான சிறப்புப் பொருளாதார மண்டலக் கட்டிடம் ஒன்றின் நிலவறைக்குள் புகுந்த தண்ணீர் வடியவே இல்லை. வாகனங்கள் நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்ட அந்த நிலவறையில் நூற்றுக்கணக்கான கார்கள் இன்னமும் சிக்கியுள்ளன. பெருநகரக் கட்டிடங்களின் தரைகீழ் தளங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை மூழ்கியிருக்கும் கார்கள் நம் முன் எழுப்புகின்றன.
நிலவறைகளை எப்படி அமைக்க வேண்டும்?
தற்போதைய கட்டிட விதிகளின்படி, அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வர்த்த மால்களுக்கான நிலவறைகளை அமைக்கும்போது, சமதளத்திலிருந்து 1.2 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் கட்டப்படக் கூடாது. அத்துடன் தலைக்கு மேல் குறைந்தபட்சம் 2.4 மீட்டர் இடைவெளி இருக்குமாறு அமைக்கப்பட வேண்டுமென்று விதிமுறைகள் கூறுகின்றன. தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவருவதற்கும் பிற விபத்துக் கருவிகளை இயக்குவதற்கும் போதுமான இடம் நிலவறைகளில் இருத்தல் அவசியம்.
நிலவறையிலேயே இரண்டாவது தளம் அமைக்க வேண்டுமெனில் ஒளியும் காற்றும் வெளியேறும் வசதிகளைக் கண்டிப்பாக உருவாக்க வேண்டும். தீ விபத்துத் தடுப்பு விதிமுறைகளையும் கடுமையாகப் பின்பற்றுதல் அவசியம். தேசிய கட்டிட விதிகள்தான், அனைத்து நகர்புறக் கட்டிடக் கட்டுமானங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளன. அதன்படி, நிலவறையில் சரக்கறை, வங்கிப் பணம் வைக்கும் அறை, வாகனங்கள் பார்க்கிங், குளிர்பதன இயந்திரங்கள் ஆகியவற்றை மட்டுமே வைப்பதற்குப் பயன்படுத்த முடியும்.
நிலவறைப் பகுதிகளில் மக்கள் குடியிருப்பதற்குப் பயன்படுத்தவே கூடாது. பாதாளச் சாக்கடை விதிகள் அனுமதித்தால் மட்டுமே சமையல் கூடங்கள் மற்றும் குளியலறைகளை நிலவறைகளில் அமைக்க வேண்டும். தேசியக் கட்டிட விதிமுறைகள் நாடு முழுவதும் ஒன்றாக இருப்பினும் பிராந்திய அளவில் கட்டிட விதிமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் முரண்பாடாகவே இருக்கின்றன.
இடரில்லா ஆலோசனைத் தொழில்துறைகளின் பட்டியலில் வரும் மருத்துவர், வழக்கறிஞர், கட்டிடவியலாளர் போன்றோர் நிலவறைகளில் தங்கள் பணியைச் செய்யலாம் என்று நகர்புறக் கட்டிட விதிகள் கூறுகின்றன. ஒரு கட்டிடத்தின் தளப் பரப்பு விகிதம் (எப்ஏஆர்) கணக்கிடப்படும்போது நிலவறையில் செயல்பட அனுமதிக்கப்படும் கட்டிடப் பரப்பளவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இல்லையெனில் நிலவறைப்பகுதி தளப் பரப்பு விகிதக் கணக்கெடுப்புக்குள் வராது.
“ஒரு கட்டிடத்தின் தேவை மற்றும் வசதியைக் கருதியே நிலவறைப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அவற்றுக்குப் பயனாளிகளிடமிருந்து பணம் பெறக் கூடாது. வர்த்தக ரீதியாகவும் கட்டணங்களை வசூலிக்கவும் கூடாது” என்கிறார் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மூத்த ஆய்வாளரான அவிகால் சோம்வன்சி. டெல்லியில் உள்ள எந்த வர்த்தக மால்கள் மற்றும் அலுவலகங்களிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு அனுமதியில்லை. ஒரு வர்த்தக மாலில் கழிப்பறை வசதியைப் போலவே வாகன பார்க்கிங்கும் பொது உபயோகமாகவே கருதப்பட வேண்டும். கட்டணம் வசூலித்தல் கூடாது.
ஆனால் இதுபோன்ற விதிமுறைகள் அனைத்தும் இந்தியா முழுவதும் தொடர்ந்து மீறப்பட்டே வருகின்றன. நிலவறைகளில் குடியிருப்புகளும், வர்த்தகச் செயல்பாடுகளும் சகஜமாகச் செயல்படுகின்றன. இது விதிமீறல் மட்டுமல்ல பயனாளிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கும் ஆபத்தானது.
நிலவறைகளை எப்படி வடிவமைக்கிறோம்?
நிலவறைகளைப் பயன்படுத்துவதும், கட்டிட வடிவமைப்பின் ஒரு அங்கமாக ஒருங்கிணைப்பதும் மிகவும் சிக்கலான விஷயம் என்கிறார் கட்டிடவியலாளர் தாரா முரளி. “நிலவறைகளில் இயற்கையான ஒளியும் காற்றும் இல்லாமல் இருப்பதால், அதற்கான வசதியை உருவாக்குவது குறித்து நன்கு திட்டமிட வேண்டும். இன்று பெரும் கட்டிடங்களின் நிலவறைகளில் கட்டப்படும் நிலவறைகள் செங்குத்தாகத் திறந்த இடத்தின் பக்கவாட்டிலோ நுழைவாயிலுக்கு நேரெதிரிலோ உள்ளன. அவை அபாயகரமானவை” என்கிறார்.
ஒரு நல்ல நிலவறைக் கட்டிட அமைப்பு நல்ல காற்றுவசதி, கட்டமைப்பு வசதி, தீ விபத்து போன்றவற்றிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளுடன் இருக்க வேண்டும். ஒரு கார் விடும் இடத்துக்கும் இன்னொரு கார் விடும் இடத்துக்கும் நடுவில் மூன்று, நான்கு கார்களின் அளவு இடைவெளி இருத்தல் அவசியம். அத்துடன் வேறு வேறு வண்ணங்களால் வேறுபாடு காட்டப்பட்ட இடங்களும் பளிச் வெளிச்சமும் அவசியம்.
தீ விபத்து மற்றும் மழை வெள்ளம் போன்ற இடர்ப்பாடுகளில் உயிருக்கும் உடைமைகளுக்கும் சேதாரம் ஏற்படுத்தாமல் இருக்கவும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிலவறைகளில் அவசியம் இருக்க வேண்டும். தண்ணீர் சேரும் இடங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
“நிலவறைப் பகுதி, மனைப் பகுதியின் பரப்பளவில் 30 முதல் 50 சதவீதம் இருக்க வேண்டும். வாகனங்கள் உள்ளே வரும் வழியும் வெளியேறும் வழியும் சரியாக இருத்தல் வேண்டும்” என்கிறார் நைட் ப்ராங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநரான காஞ்சனா கிருஷ்ணன். மழை நீர்வடிகால்கள், தீ விபத்துப் பாதுகாப்பு வசதிகள், ஒளி மற்றும் காற்று வசதிகள் அவசரக் காலத்தில் சரியாகச் செயல்படுமாறு கண்காணித்தல் அவசியம் என்கிறார் காஞ்சனா.
கடுமையான கட்டிட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நான்கு தளங்களில் நிலவறை அமைப்புகள் உள்ளன. ஆனால் தகுந்த தீ விபத்துத் தடுப்பு, காற்றோட்ட வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் அங்கே கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன.
சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சாலை மற்றும் ஹாங்காங்கின் டைம்ஸ் சதுக்கம், கோவ்லூன் டாங் போன்றவை நேரடியாகப் பொதுப் போக்குவரத்து சாலை வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஷங்கர்
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067094
|