நகரில் வசிக்கக் கூடிய வறுமைக் கோட்டுக்குள் வாழும் குடிசைவாசிகளை நகரைவிட்டுத் துரத்த வேண்டியதில்லை. அவர்களுக்கு நகருக்குள்ளேயே வீடு கட்டித் தர ஒரு சூப்பர் திட்டம் இருக்கிறது. ஒரு பைசா கூட அரசு செலவழிக்க வேண்டியதில்லை.. அதே சமயம் இரட்டிப்பு லாபமும் அரசுக்குக் கிடைக்கும்’ எனக்கூறி அசத்துகிறார் ஒரு இளம் பொறியாளர். அவர் பெயர் கணேஷ். சென்னையைச் சேர்ந்தவர்.
‘‘சார் சிட்டிக்குள்ளே நிலம் இல்லை என்பது உண்மை தான். ஆனால், இருக்கும் குடிசைப் பகுதிகளிலேயே பைசா செலவில்லாமல் குடிசைவாசிகளுக்கு வீடு கட்டித் தரவும், அதே சமயம் வீடுகளின் விலையைக் குறைக்க அபரீதமான திட்டம் இருக்கிறது.
இதனை அரசும் அதிகாரிகளும் செவி கொடுத்து கேட்க வேண்டும். அதே சமயம் தனது வறட்டு கொள்கை, வேதாந்தம், போன்றவற்றை விட்டுக்கொடுக்க தயாராக இருக்க வேண்டும்’’ எனக் கூறிய கணேஷ் தனது கட்டுமான திட்டத்தை விவரிக்க தொடங்கினார்.
சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகள் உள்ளன. முதலில் உதாரணத்திற்கு ஒரு குடிசைப் பகுதியை எடுத்துக் கொள்வோம். (ஆற்றை ஆக்கிரமித்திருந்தால் அது அகற்றப்பட வேண்டியதுதான். அதனால், முதலில் ஆற்றோரம் அல்லாத குடிசைப்பகுதியை எடுத்துக் கொள்வோம்) ஒரு ஏக்கரில் சுமாரில் 500 வீடுகள் இருப்பதாய் கணக்கு கொள்வோம். இவர்கள் பெரும்பாலும், கழிவறை, குளியலறை வசதிகள் இல்லாமல், சாலையோரங்களில் துணி துவைக்கக்கூடிய குடும்பங்களாகத் தான் வாழ் நாளைக் கடத்துகிறார்கள். அவர்களின் வசிப்பிடம் என்று பார்த்தால் 100 ச.அடி முதல் 300ச.அடிக்குள்ளாகத்தான் இருக்கும். குறுகலான சந்துகள் மூச்சு விட முடியாத நெருக்கடி போன்ற பல பிரச்சனைகளால் சுற்றுப்புறம் கெட்டு, சுகாதாரம் கெட்டு பலவித நோய்களுக்கு உண்டாகின்றனர்.
இவர்களுக்கு மருத்துவம் செய்ய பல கோடிகளையும் அரசு செலவு செய்கிறது. இந்தப் பிரச்சனைகளையயல்லாம் போக்கி அவர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய தரமான வீட்டை பைசா செலவில்லாமல் நம்மால் கட்டித்தர முடியும். உதாரணத்திற்கு 1000 வீடுகள் கொண்ட ஒரு குடிசைப்பகுதியின் பரப்பு ஏறத்தாழ இரண்டு ஏக்கர் என வைத்துக்கொள்ளுங்கள். அந்த நிலப்பரப்பில் வசிக்கும் அந்த 1000 குடும்பங்களை தற்காலிகமாக அகற்ற வேண்டும். (கவனிக்கவும் தற்காலிகமாகத்தான்). இப்போது நகரின் முக்கியமான இடத்தில் அரசுக்கு 2 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது. இதில் அரசு முதலில் ஒரு ஏக்கர் நிலத்தை அதாவது 45 ஆயிரம் சதுர அடி நிலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தலா 500ச.அடி கொண்ட 5 வீடுகள் உள்ள ஒரு தளமாக (ஒரு தளத்தில் 5 வீடுகள்) 40 அடுக்குகள் வீடு கட்டப்பட வேண்டும். 5x40 = மொத்தம் 200 வீடுகள் கிடைக்கும். இது போல 5 டவர்கள் கட்டப்பட்டால் நமக்கு 1000 வீடுகள் கிடைக்கும் ஒரு டவரின் அதிகபட்ச பரப்பு 3000 ச.அடி என்று கொண்டால் 5 டவருக்கு 15 ஆயிரம் சதுர அடி தேவை. மீதி உள்ள 30000 ச.அடி காலி இடமாக வைத்துக் கொள்ளலாம்.
இப்போது அடுத்த ஒரு ஏக்கர் நிலத்துக்குப் போவோம். அங்கும் அதே தரத்தில் அதே பரப்பில் 5 டவர்கள். ஒவ்வொன்ஷீலும் தலா 200 வீடுகள் மொத்தம் 1000 வீடுகள். ஆக மொத்தம் 2000 வீடுகள். அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் நமக்கு கிடைத்து விடுகின்றன.
இந்த 2000 வீடுகளைக் கட்டுவதற்கு உத்தேச கட்டுமானச் செலவு என்ன? அதைப் பார்ப்போம்.
பொதுவாக நல்லத் தரத்தில் வீடுகளை உருவாக்க ச.அடிக்கு ரூ. 2000 ஆகும். ஆனால் லஞ்ச லாவன்யங்கள், அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள் போன்றவற்றை ஒழித்து இதற்கென ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமித்து கண்காணித்தால் ரூ.1500-க்கு அதே தரத்தில் வீடு கட்ட முடியும் சரியா?
அடுத்ததாக சிமெண்ட், மணல், கம்பி போன்ற விஷயத்திற்கு வருவோம். அடாவடியாக வியாபாரம் செய்யும், தன்னிஷ்டத்திற்கு லாபம் வைத்து விற்கும் சிமெண்ட் ஆலைகளை அழைத்து பேசி ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.250க்கு தர இந்தப் புராஜெக்டுக்கு கட்டாயம் தந்தே ஆக வேண்டுமென்று நெருக்க வேண்டும். (இதெல்லாம் நிஜத்தில் நடக்காது என்று எண்ண வேண்டாம்.
அப்படி நெருக்கினால் சதுர அடிக்கு நூறு ரூபாய் மிச்சமாகும்). சிமெண்ட் நிறுவனங்கள் முரண்டுபிடித்தால் அரசே தனது TANCEM (டான்செம்) தொழிற்சாலை மூலம் மறுபடி சிமெண்ட் உற்பத்தி தொடங்க வேண்டும். இப்படி செய்தால் சிமெண்ட் மூட்டைக்கு ரூ.200 மட்டும் அரசு செலவழித்தால் போதும். இதே போல் கம்பி தயாரிப்பாளர்களிடம் அரசின் புராஜெக்ட்டுக்கு என விலைக்குறைப்பில் பொருட்கள் தர வலியுறுத்த வேண்டும். கையூட்டு இல்லாமல் பெரிய வியாபாரம் கிடைக்கிறதே என்ற நம்பிக்கையில் நிச்சயம் பல நிறுவனங்கள் குறைந்த விலையில் கட்டுமானப் பொருட்களை விற்க முன்வரும்.
ஆற்று மணலைப் பொறுத்தவரை வெறும் ஆள் கூலி, போக்குவரத்துக் கூலி தவிர, அரசு இந்த புராஜெக்ட்டுக்கு மணலை தேவையான அளவில் பெற முடியும். இவ்வாறாக கட்டுமானத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் விலை குறைக்கச் செய்து ச.அடி கட்டுமானச் செலவை ரூ. 1200க்கு கொண்டு வரலாம். இது தவிர, இடைத்தரகர்கள், அலைக்கழிப்புகள், தெளிவான பட்டுவாடா போன்றவற்றைக் கொண்டு வந்தால் பல கட்டிடப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் இந்த புராஜெக்டில் தங்கள் பொருட்களை விற்க முன் வருவார்கள் அல்லவா?இப்போது கட்டுமான முறைக்கு வருவோம். இது வழக்கமான வீடுகளாக அல்லாமல் கனமான சுவர்கள், அறை தடுப்புச் சுவர்கள் போன்றவற்றை கைவிட்டு வெறும் பிரிகேஸ்ட் பலகங்கள் மட்டுமே சுவர்களாக பயன்படுத்தப்பட வேண்டும். வெளிநாடுகளைப் போல 2மாடிக்கு மேல் 2 அடி வெளிப்புறச் சுவர்கள் அல்லாமல் கிரில் மற்றும் கண்ணாடி அல்லது பிரிகேஸ்ட் கொண்டு சுவர்கள் அமைக்கப்பட வேண்டும். பிரிகேஸ்ட் படிக்கட்டுகள் அமைக்கப்பட வேண்டும்.
தரைக்கு மார்பிள், டைல் போன்றவற்றை தவிர்த்து விட்டு கான்கிரீட் பாலிஷிங் கொண்டு தரை அமைக்க வேண்டும். மெயின் கதவுகள், ஸ்டீல் கதவுகளாகவும், பிற கதவுகள் ஃபைபர் கதவுகளாகவும் பொருத்த வேண்டும். ஆக இப்படி ஒரு பரந்த விசாலமான காற்றோட்டமான இரு படுக்கை அறை கொண்ட வீட்டைக் கட்டுவதற்கு அரசும் மற்றவர்களும் மனது வைத்தால் வெறும் ச.அடி கட்டுமானச் செலவை 1000 ரூபாய் க்கு கொண்டு வரலாம்.
இப்போது அந்தச் செலவுக்கு வருவோம். இந்த வீடுகளைக் கட்டுவதற்கு அரசுக்கு வீடு ஒன்றுக்கு 5 லட்சம் எனில் (500 ச. அடி), 2000 வீடுகளுக்கு 100 கோடி செலவாகும். இதில் 1000 வீடுகளை அங்கு குடியிருக்க ஏழைமக்களுக்கு இலவசமாக கொடுத்துவிட்டால் நமக்கு மீதி 1000 வீடுகள் கிடைக்கின்றன. அந்த வீட்டின் விலை தலா ரூ. 20 லட்சத்திற்கு விற்றால் கூட அந்த ஆயிரம் வீட்டின் விற்பனை மூலம் அரசுக்கு 200 கோடி கிடைக்கும். இதில் அரசுக்கு லாபம் 100 கோடி ரூபாய். (இந்த பணத்தில் இப்போது ஆற்றங்கரை குடிசைவாசிகளுக்கு மாற்று இடத்தில் வீடுகளைக் கட்டி இலவசமாக தரலாம்.) வெறும் 20 லட்சத்தில் சிட்டிக்குள் 500 ச.அடி வீடு என்றால் எல்லோரும் ஒன்றுக்கு இரண்டு என வாங்குவார்கள் என்பதால் விற்பனை குறித்து பயமில்லை. ( இரண்டு புராஜெக்டுக்கும் தனித்தனி வழிகள், பிரிவுகள் இருத்தல் நல்லது).
இதனால் சந்தையில் தனியார் வீடுகளின் விற்பனை வெகுவாக குறையும். அடுக்குமாடி வீட்டின் அசல் மதிப்பு குறைவதால் நகரத்தின் வீட்டின் வாடகை குறையும். அதுமட்டுமல்ல தற்காலிகமாக வீட்டை விட்டுச் சென்ற குடிசைவாசிகளை திரும்ப அழைக்கும் போது அவர்கள் புத்தம் புதிய உணர்வுடன் ஒரு தர
மான அடுக்கு மாடியில் காற்றோட்டமும், சுகாதாரமும் நிறைந்த வீட்டில் தாங்கள் வாழ்ந்த பகுதியிலேயே தங்கள் புதிய வாழ்க்கை அத்தியாயத்தை துவங்குவார்கள்.
இப்படியே ஒவ்வொரு குடிசைப் பகுதியையும் சீர் செய்து வந்தால், நகரம் முழுக்கவே ஏன் தமிழகம் முழுக்கவே அதி உயரக் கட்டடங்களால் அழகு பெறும், குடிசைகள் எங்கும் இருக்காது. நெரிசல் மிகுந்த வீடுகள் வசதி குறைவான வீடுகள் எல்லாம் ஒழியும். இந்த மாற்றம் நடப்பதற்கு தேவை அரசின் முழு ஒத்துழைப்பு மட்டுமே...! (இதே முறையைப் பின்பற்றி மாநிலம் முழுக்க ஒரு கோடி வீடுகள கட்டினால் எல்லா மக்களுக்கும் சொந்த வீடு கிடைக்கும்).
இதில் அரசுக்கு உள்ள இரண்டு சவால்.
1. நாற்பது அடுக்கு மாடி கட்டுவது,
2.ச.அடி கட்டுமனச் செலவை ரூ.1000 க்கு கொண்டு வருவது. இதை இரண்டுமே சாதித்து விட்டால் தமிழகம் சிங்கப்பூரை விட பன்மடங்கு வளர்ச்சியில் ஜொலிக்கும்.
ஆனாலும் என் ஆலோசனையின் குறைகளாக சிலர் பின் வருவனவற்றைச் சொல்லலாம்.
அதையும் நானே கூறிவிடுகிறேன்.
1. எப்படியும் வீடுகள் விற்கும் என்றால் கூட, முதலில் கட்டுமானத் திட்டத்திற்கு முதலீடுச் செய்ய, செலவுகளைக் கையாள நிதி வேண்டுமே...
அந்த நிதி விரைவில் திரும்ப கிடைக்கப்போவது தான் என்பதால் அரசு முன்வந்து முதலீடு செய்ய வேண்டும். இல்லையயன்றாலும், அதற்கு பெரும் கட்டுமான நிறுவனங் களுடன் ஜாயின்ட் வென்ச்சர் முறையில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். (1000 வீடுகள் அரசுக்கு; 1000 வீடுகள் தனியாருக்கு) அரசுக்கு ஒரு வேலையும் கிடையாது, செலவும் கிடையாது. நிலம் கொடுத்தால் போதும். கண்காணித்தல்
மட்டும் போதும் (முன்பதிவு முறையிலும் நிதி திரட்டலாம்).
2. வெறும் பில்லர், தளம், பிரிகேஸ்ட் சுவர் ஓ.கே. ஆனால் 40 மாடி உயரத்திற்கு (ஏறத்தாழ 120மீ) எப்படி குடியிருப்பு கட்டுமானங்கள் கட்டுவது? தமிழ்நாட்டில் இது சாத்தியமா? பூகம்ப அபாயம் இருக்காதா?
நிச்சயம் 40 மாடிகள் என்பது தமிழ்நாட்டில் அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு தேவையான ஒன்று. அன்றாடம் பூகம்ப, அதிர்வுகள் ஏற்பட்டு கொண்டிருக்கிற நாடான ஜப்பானிலேயே 200 மாடிக் கட்டடங்கள் சர்வ சாதாரணம். பெருமளவு நிலப்பரப்பு உள்ள சீனாவில் கூட 200 மாடி கட்டடங்கள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நமது மண்ணின் குடிகளை நகரத்திலேயே தக்க வைக்க வேண்டும். வீட்டின் விலை குறைய வேண்டும் என்றால் அதி உயரக் கட்டடங்களை அரசு ஊக்குவிப்பது தான் ஒரே வழி.
3. என்ன தான் நீங்கள் சொன்னாலும் ச.அடிக்கு ரூ.1000 என்பது முடியாத காரியம் போல் உள்ளதே? தவிர இதற்கென அஸ்திவாரச் செலவு, பாதாள பார்க்கிங் போன்றவற்றை கட்ட வேண்டுமே.
நிச்சயமாக அரசு முயன்றால் ச.அடிக்கு ரூ. 1000க்குள் கொண்டுவரலாம். எனது பேட்டியை மறுபடி படியுங்கள். (ரூ. 1200 , ரூ1300 எனப் போனால் 500ச.அடி என்பது 450 அல்லது 400 ஆக வீட்டின் பரப்பை குறுக்கலாம். அதே போல் வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் முயலலாம்). ஆனால், செலவு மட்டுப்படும்.
சுற்றுப்புறச் சூழல் துறை, விமானபோக்குவரத்துத் துறை, தீயணைப்புத் துறை மூன்றும் ஒன்று கூடி அரசு வீட்டு வசதி துறையுடன் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தால் ஏழைகளும் அடுக்கு மாடியில் வசிக்கலாம். வீட்டின் விலையை பாதியாக குறையலாம். இது மட்டும் வெற்றிகரமாக நடந்து விட்டால் நாட்டிலேயே அதிக அளவு கட்டுமானப் பணிகள் நடக்கும் மாநிலமாக, வேலைவாய்ப்பு உள்ள மாநிலமாக தமிழகம் விளங்கும். இதனால், கட்டுமானத் தொழில் புத்துயிர் பெறும், ஏழைகளுக்குத் தரமான வீடுகள் கிடைக்கும், மர்க்கெட்டில் வீடுகளின் விலை குறையும், ஒரே முடிவில் இருக்கிறது நம்மின் மொத்த வளர்ச்சியும்” என்கிறார் கே. கணேஷ்.
எல்லாவற்றையும் விமர்சனம் செய்வது, குறை சொல்வது தான் அறி வு என நம்பிக் கொண்டிருக்கும் நமது மத்தியில் புது உத்வேகத்துடன், புதிய செயலாக்கத்துடன் ஒரு பிரம்மிக்கத்தக்க ஜீரோ காஸ்ட் வீடு கட்ட ஆலோசனை தரும் பொறியாளர் கே.கணேஷ் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
அரசு இயந்திரம் இதனைப் படித்து, இந்த திட்டத்தில் ஏதேனும் குறைகள், பிழைகள் இருந்தால் அவற்றை நீக்கி செயல்படுத்த முன் வரவேண்டும் என்பதே நமது விருப்பம்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...