கம்பீரம் தரும் டாம்பீக டைல்கள்
தலை நிமிர்ந்து பார்த்தால் வீட்டின் கம்பீரம் கண்ணை நிறைக்கும். அதே தலை குனிந்தால் தளத்தில் பரவி இருக்கும் டைல்களே கண்களில் படும். அந்த டைல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவ்வளவு எளிதில் முடிவு செய்துவிட முடியாது. ஏனெனில் பல காரண காரியங்களை ஆராய்ந்து அலசிய பின்னரே டைல்கள் விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும். இப்போதைய இண்டர்நெட் யுகத்தில் எதற்கெடுத்தாலும் வெப்சைட்டுகள்தான் சட்டெனத் தலைகாட்டுகின்றன. அவற்றை மேய்ந்தும் நண்பர்களின் ஆலோசனையைப் பெற்றும் தேர்ந்தெடுக்கும் டைல்கள் பற்றிய சில விஷயங்களைப் பார்ப்போம்.
டிஜிட்டல் டைல்கள்
மூலப் பொருள்கள் அடிப்படையில் டிஜிட்டல் டைல்கள், செராமிக் டைல்கள், விர்டிஃபைடு டைல்கள், போர்செலைன் டைல்கள், க்ளேஸ்டு டைல்கள் எனப் பலவகை டைல்கள் உள்ளன. உங்களது தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற டைல்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். பொதுவாக டிஜிட்டல் டைல்களைப் பொறுத்தவரை அவை சுவர்களின் மீது பொருத்தப்படுபவை. டைல்களில் அழகழகான டிசைன்கள் டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும். குளியலறை, சமையலறை போன்றவற்றின் சுவர்களுக்கு இந்த வகையான டைல்களைப் பதிக்கலாம்.
செராமிக் டைல்கள்
செராமிக் டைல்கள் என்பவை களிமண், மணல் வேறு சில இயற்கைப் பொருள்கள் ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்படும். இவை வீட்டின் உள்புறத்துக்கும் வெளிப்புறத்துக்கும் ஏற்றவை. அதே போல் சுவரில் பதிக்கவும், தளத்தில் பதிக்கவும் ஏற்ற வகையில் இவை தயாரிக்கப்படுகின்றன. செராமிக் டைல்கள் நீடித்து உழைப்பவை. இவற்றை எளிதில் சுத்தப்படுத்தலாம். இவை ஈரப்பதத்தைத் தாங்கவல்லவை. இவற்றில் கறைகள் பெரிதாகப் படிவதில்லை. இப்படிப் பல அனுகூலங்கள் கொண்டவை செராமிக் டைல்கள்.
விர்டிஃபைடு டைல்கள்
விர்டிஃபைடு டைல்ஸுக்கும் அடிப்படை களிமண்தான். ஆனால் அத்துடன் சிலிக்கா, குவார்ட்ஸ், ஃபெல்ட்ஸ்பர் என்ற கனிமப் பொருள்கள் கலந்து இவை தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் உலையிலிட்டு சூடுபடுத்தி எடுக்கும்போது பீங்கான் போன்ற பளபளப்பான மேற்புரத்துடன் கூடிய டைல்கள் கிடைக்கின்றன. இந்த டைல்கள் உறுதிமிக்கவை. மேலும் இவற்றில் நீர் ஒட்டுவதில்லை. கறைகளும் படிவதில்லை. ஆகவே எளிதில் சுத்தப்படுத்திவிடலாம். ஏதேனும் கறை படிந்தால் கூட அப்படியே துடைத்து எடுத்துவிடலாம். மார்பிள்களைவிட, கிரானைட்டுகளைவிட அதிக வலுவுள்ளவை இந்த டைல்கள். வண்ணங்களும் எளிதில் போகாது. டைல்களில் பொருள்கள் உரசும்போது பெரிய அளவில் கீறல்கள் விழ வாய்ப்பில்லை.
இவை தளத்துக்கு ஏற்றவை. சுவர்களிலும்கூட இத்தகைய டைல்களைப் பதிக்கலாம். இவை தொழிற்சாலைகளில் உருவாக்கப்படுவதால் தேவைக்கேற்ற அளவுகளில் இவை கிடைக்கும். இவற்றை எளிதில் பதித்துவிடலாம். பதித்த டைல்கள் தளத்துடன் ஒருங்கிணைய அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை. சிமெண்ட், மொஸைக், மார்பிள் போன்றவை செட்டாக குறைந்தபட்சம் 48 மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் 76 மணி நேரம் வரை தேவைப்படும். அதன் பின்னர்தான் அதை பாலீஷ் செய்ய முடியும். அந்தத் தொல்லை இவற்றில் இல்லை. உடனடியாக செட்டாகிவிடும். மேலும் இவற்றை பாலீஷ் செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே பாலீஷ் செய்த நிலையிலே இது கிடைக்கும்.
போர்செலைன் டைல்கள்
போர்செலைன் டைல்கள் என்பவை சீனக் களிமண் மூலம் உருவாக்கப்படுபவை. இந்த டைல்களின் நீர் உறிஞ்சும் தன்மை மிக மிகக் குறைவு. எனவே மிகக் குறைந்த வெப்பநிலையின் போது டைல்களின் மேற்பரப்பில் நீர் பரவும் பிரச்சினை இதில் ஏற்படுவதில்லை. இவை வழக்கமான செராமிக் டைல்களைவிட மிகவும் வலுக் கூடியவை. ஆகவே அதிகமான புழக்கம் இருக்கக்கூடிய தளங்களுக்கு ஏற்ற டைல்கள் இவை. பலம் பொருந்திய டைல்களுக்கான தேவை இருக்கக்கூடிய இடங்களில் இவற்றைப் பயன்படுத்தலாம். அதிக வலுவுள்ள இந்த டைல்கள் நீடித்து உழைக்கக்கூடியவை. அதிகமான ஜன சந்தடியால் டைல்களின் தேய்மானம் பெரிய அளவில் இருப்பதில்லை, நிறமிழப்பதில்லை.
க்ளாஸ்டு டைல்கள்
செராமிக் டைல்களின் மேலே ஒரு அடுக்காகக் கண்ணாடித் தூளைத் தூவி பளபளப்புத் தன்மையுடன் உருவாக்கப்படுபவை க்ளாஸ்டு டைல்கள். இவற்றைக் கட்டிடத்தின் உள் புறத்திலும் வெளிப்புறத்திலும் பயன்படுத்தலாம். பொதுவாக அலுவலகக் கட்டிடங்களில் இத்தகைய டைல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வீட்டின் பூச்சுகள் முடிந்த பின்னர் தளம் போடப்படும் சமயத்தில் டைல்களின் வேட்டையைத் தொடங்கலாம். எல்லா அறைகளுக்கும் ஒரே விதமான டைல்களை நாம் பதிப்பதில்லை. புழங்கும் அறையைப் பொறுத்து பாவ வேண்டிய டைல்கள் மாறுபடும். வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை, பால்கனி, ஃபோர்டிகோ என ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்றபடி தனித்தனியான டைல்களைத் தேர்ந்தெடுப்போம்.
வரவேற்பறைத் தளத்துக்கான டைல்கள் பார்ப்பதற்கு வசீகரமாக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் எப்போதும் புழக்கத்திலேயே இருப்பதால் அதற்கேற்ற தரத்துடனான டைல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அறையின் ஒட்டுமொத்த உள்ளலங்காரத்தைத் தீர்மானிப்பதில் தளத்தின் டைல்களுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை மறந்துவிடலாகாது. அறையின் வெளிச்சத்தைத் தூண்டிக்கொடுக்கும் வகையிலான நிறத்திலேயே டைல்கள் இருப்பது நலம். அப்போதுதான் ஒளிர விடும் விளக்குகளின் வெளிச்சத்தை டைல்கள் மேம்படுத்தித் தரும். அறையும் ஒளிமிக்கதாக விளங்கும்.
டைல்களுக்கென நீங்கள் எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கியுள்ளீர்களோ அதற்குள் அடங்கும்படி அவற்றைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இல்லையெனில் வீட்டின் கட்டுமான விலை எக்கச்சக்கமாகிவிடும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067009
|