கடந்த ஜூலை 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி தான் நாடு முழுவதும் பேசப்படுகிற லேட்டஸ்ட் டாக். பண மதிப்பிழப்பிற்கு அஞ்சாதவர்கள் குழம்பாதவர்கள் கூட, ஜி.எஸ்.டி அமலாக்கம் குறித்து அச்சப்படுவதை நேரடியாக நாம் காணமுடிகிறது. தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் இது தொடர்பாக எத்தனை கருத்துரங்குகள் நடந்தாலும் அதில் கலந்து கொண்டும் குழப்பம் தீராமல் தலையை சொரிந்துக் கொண்டவர்களும் அதிகம்.
ஜி.எஸ்.டி என்பது புது வரியா? வரிக்கு வரியா? பழைய வரிகளுக்கு பதிலான புது வரியா? யாருக்கெல்லாம் ஜி.எஸ்.டி? சிறு பில்டர்களுக்கு இதில் பாதிப்பா? சிறு சிறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் கான்ட்ராக்டர்களுக்கு ஜி.எஸ்.டி உதவியா? பகையா? வீடு கட்டும் போது மக்களுக்கு ஜி.எஸ்.டி எந்த வகையில் பாதிப்பு? கட்டிடப் பொருட்கள் விற்கும் டீலர்கள், விற்பனையாளர்கள் எப்படி ஜி.எஸ்.டியை கடைப்பிடிக்க வேண்டும்? வருங்காலத்தில் ஜி.எஸ்.டியை பில்டர்கள் எவ்வாறு கையாள்வது? என்பது போன்ற ஆயிரக்கணக்கான ஐயங்கள் நாள்தோறும் வந்துக் கொண்டே இருக்கின்றன.
இது பற்றி விரிவாக சொல்வதற்கு சென்னையைச் சேர்ந்த ஆடிட்டரும் , சுப்ரமணியன் & அசோசியேட்ஸ் நிறுவனருமான திரு. சுப்ரமணியன் அவர்களை தொடர்பு கொண்டு கட்டுமானத்துறையில் ஜி.எஸ்.டி நிறைவேற்றம் குறித்து விரிவாக கேட்டிருந்தோம்.
கட்டுமானப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி எவ்வாறு கணக்கிடப் படுகிறது? ஜி.எஸ்.டியால் கட்டிடப்பொருட்கள் விலை உயருமா?
‘‘நிச்சயம் விலை உயராது. இதற்கு முன்பு பல்வகை பொருட் களுக்கும் பலப்பல வரிகள் வசூலிக்கப்பட்டன. ஒரு கட்டுநர் சிமெண்ட், ஸ்டீல், மணல், கண்ணாடி, பெயிண்ட் என பலப் பொருட்களை வாங்குகிறார். இந்த பொருட்கள் எல்லாம் ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு சந்தையில் வழங்கப்படுகின்றன. அந்த பொருட்களின் விற்பனையில் அதன் மொத்த வரியில் 14.5% வாட் வரி மற்றும் 12.5 எக்சைஸ் வரி ஆக மொத்தம் 27 சதவீதம் வரி இருந்தது. மணல், ஜல்லி போன்ற சில பொருட்களுக்கு 5% வாட் ஆக இருந்தது. இது தான் தற்போது ஒரே வரியாக ஜி.எஸ்.டியாக கணக்கிடப்படுகிறது.
ஜி.எஸ்.டியில் எளிதான கணக்கிடல் மற்றும் புரிதலுக்கான வரி விகிதத்தை 5, 12, 18, 28 என நான்காக குரூப் செய்திருக்கிறார்கள். 1முதல் 6% இருந்த வரி விகிதங்கள் 5 வரிப் பிரிவில் இணைக்கப்பட்டிருக்கின்றன. 7 முதல் 15% இருந்த வரி விகிதங்கள் 12% வரிப் பிரிவில் இணைக்கப்பட்டிருக்கின்றன. 14 முதல் 21% ஆக இருந்த வரி விகிதங்கள் 18 வரிப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 25%க்கு மேற்பட்டு 35 வரையிலான வரி விகிதங்கள் 28 சதவிகிதத்தில் சேர்க்கப்பட்டுளன. இதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் 4% வரி கட்டியவர்கள் 5% ல் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். 7%, 8% வரி கட்டியவர்களும் 5%ல் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இதே போல் ஒவ்வொரு வரிப்பிரிவிலும் வரி விகிதங்கள் கூட குறைய மாறியிருக்கலாம். ஆனால், பெரிய அளவில் மாற்றம் இல்லை.
உதாரணத்திற்கு ஒரு கட்டுநர் ஸ்டீல் வாங்கும் போது 18% வரி கட்டிருக்கிறார். (முன்பு 5% வாட், 12.5 எக்சைஸ்) இப்பொழுதும் அதற்கு 18% ஜி.எஸ்.டி தான். இதனால், கட்டுமானச் செலவு உயர்வதற்கு வாய்ப்பில்லை என்றாலும் துவக்கத்தில் 5 முதல் 10 சதவிகிதம் வீட்டு விலை உயரலாம். ஆனால், அது கூட தற்காலிகம் தான். சில மாதங்கள் செல்லச் செல்ல, ஜி.எஸ்.டி அனைவருக்கும் புரியத் துவங்க விலையும் குறைய துவங்கும்’’.
ஜிஎஸ்டியால் பிடர்களுக்கு எந்த மாதிரியான நன்மை ஏற்படும்?
‘‘இனிமேல் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு வரி கட்டினால் அதற்கான ஜி.எஸ்.டி கிரெடிட் உங்களுக்கு கிடைக்கும். முந்தைய நிலை என்னவென்றால் எந்த பொருளும் உற்பத்தி செய்துதான் வருகிறது. அந்த உற்பத்திக்கு மத்திய அரசாங்கம் 12.5% எக்சைஸ் வரி விதித்தது. கட்டுமானர் ஒரு பொருளை வாங்கும் போது அந்த எக்சைஸ் மற்றும் மாநில அரசாங்கம் விதித்த வாட் இரண்டையும் செலுத்தி தான் வாங்குகிறார். ஆனால், மத்திய அரசாங்கம் விதித்த எக்சைஸ்க்கு அவரால் டாக்ஸ் கிரெடிட் எடுக்க இயலாது இப்போது இதை ஒரு உதாரணம் கொண்டு விளக்குகிறேன். ஜி.எஸ்.டிக்கு முன் ஒரு பில்டர் சிமெண்ட் வாங்கும் போது அந்த சிமெண்ட்டிற்கான உற்பத்தி வரியையும் கட்டித்தான் வாங்குகிறார். ஆனால், உற்பத்திக்கான எக்சைஸ் வரிக்கு அவரால் கிரெடிட் எடுத்துக் கொள்ள இயலாது. ஆனால் ஜி.எஸ்.டி அந்த டாக்ஸ்க்கு கிரெடிட் எடுத்துக் கொள்ள இயலும்.
இப்பொழுது ஜி.எஸ்.டியின் படி நீங்கள் வாங்கும் பொருளில் உள்ள எல்லா நிலையிலும் உள்ள ஜி.எஸ்.டியின் சலுகையைப் பெற முடியும். அது மட்டுமல்ல, வியாபார நிமித்தமாக செலவு பண்ணக்கூடிய எல்லா செலவுகளுக்கும் ஜி.எஸ்.டி கட்டியிருந்தால் அதற்கும் சேர்த்து கிரெடிட் எடுத்துக் கொள்ள முடியும். (ஒரு சில பொருட்களைத் தவிர உதாரணம் வாகனம் வாங்குதலுக்கான ஜி.எஸ்.டி உணவு மற்றும் குளிர் பானங்களுக்கு ஜி.எஸ்.டி போன்ற சில பொருட்களுக்கு மட்டும் கிரெடிட் எடுக்க இயலாது). இதனால், பில்டர்கள் ஒரு மாதம் கொள்முதல் செய்த பொருட்களின் வரி தோராயமாக ரூ.40ஆயிரம் என்றால், அவர்கள் விற்க வேண்டிய பொருளின் மதிப்பு ரூ.34ஆயிரமாக இருக்கும். ஜி.எஸ்.டி கிரெடிட்டாக அந்த பில்டர் ரூ.6ஆயிரம் வரை பெறுவார். ஒவ்வொரு மாதமும் இதே போல் கிரெடிட் சேர்ந்துக் கொண்டே வர பில்டர் மூலமாக நுகர்வோருக்கு அந்தப் பலன் கிடைக்கும். வீட்டு விலை குறையும். இது உடனே நடக்காது. கொஞ்சம் காலம் பிடிக்கும். உள்ளீட்டு வரி அதிகமாக இருக்கும் போது பில்டர் அவர்கள் அந்த உள்ளீட்டு வரியை திரும்பப் பெறலாம்’’.
ஜிஎஸ்டி யின் பொதுவான நன்மைகள் கட்டுமானத்துறையில் என்னென்ன உண்டாகும்?
“ஜிஎஸ்டி மற்றுமொரு புதுவரி அல்ல, இது மாற்று வரி. ஒருங்கிணைந்த வரி. இதனால் பொருட்களின் விலை சீராக இருக்கும், விலை குறையும். தேவையற்ற அதிகாரிகளின் தொந்தரவு குறையும். முன்பெல்லாம் ராஜஸ்தானில் இருந்து கிரானைட், மார்பிள், டைல்ஸ் போன்ற பொருட்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு 7 நாட்கள் ஆனதென்றால், இப்பொழுது மூன்றே நாட்களில் பொருட்கள் வந்து சேர்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்த சோதனைச் சாவடிகள் களையப்பட்டுவிட்டன. வீண் தாமதம் குறைந்துவிட்டது. ஏறத்தாழ 30% நேரம் மிச்சமாகி விட்டது. வண்டி வாடகை, ஆட்கள், தினக் கூலி போன்றவை குறைவதால் பொருட்கள் விலையும் குறையும்’’.
நீங்கள் இப்படி சொல்கிறீர்கள், ஆனால், ஜி.எஸ்.டி காரணம் காட்டி ஏற்கெனவே ரூ.100க்கு விற்ற பொருட்களை (டைல்ஸ்) தற்போது ரூ.128க்கு விற்பதாக பொதுமக்களுக்கு புகார்கள் எழுகின்றனவே.
“சில்லறை விற்பனையாளர்கள் என்ன செய்கிறார்கள்? என்றால், ஜி.எஸ்.டியில் என்னென்ன கிரெடிட் இருக்கின்றன என்பதை கன்சிடர் செய்யாமல், தான் விற்கும் பொருட்களில் 28% வரியாக போட்டு சார்ஜ் செய்கிறார்கள். டைல்ஸை பொறுத்தவரை முன்பிருந்த வரி தொகுப்பு (எக்சைஸ் + வாட்) 27% . இப்போதுள்ள ஜி.எஸ்.டியும் 28%. மாற்றம் எதுவுமே இல்லை. எப்படி பொருள் அதிக விலைக்கு விற்க முடியும்? கூடாது. டைல்ஸ் தயாரிக்கும் போதே முன்னாடியே 12.5% எக்சைஸ் மற்றும் 14.5% வாட் கட்டியாகிவிட்டது. இப்போது டைல்ஸ்கான ஜி.எஸ்.டி 28% தான். 1% தான் ஏறியிருக்கிறது. ஆனால், எப்படி 28% ஏற்றி விற்க முடியும்? விற்பனையாளர்கள் ஜி.எஸ்.டி பற்றி புரியாமல் பொருள் விற்பனையில் 28%ஐ சேர்த்து விடுகிறார்கள். இது தவறு”.
பில்டர்கள் பொறுத்தவரை ஜி.எஸ்.டியை எப்படி கையாள வேண்டும்?
“பில்டர்களுக்கு முன்பெல்லாம் ஒரு காம்போசிஷன் ஸ்கீம் ஒன்று இருந்தது. அதன்படி அவர்கள் வாட் 2% கட்டினால் போதும். அவர்கள் வாங்கும் கான்ட்ராக்ட் ரிசிப்டில் 2% கட்டினால் போதும், என்று டி.என். வாட் டாக்ஸில் செக்rன் 6 இல் இருந்தது. அதேபோல் சேவைவரியில் 40% கட்டினால் போதும் என்று இருந்தது. அதாவது 15% சேவைவரி கட்டவேண்டும் என்றால் 6% கட்டினால் போதும் என்று இருந்தது.
ஜி.எஸ்.டி யில் பில்டர்களுக்கு காம்போசிஷன் கிடையாது. பில்டர்கள் இனி சர்வீஸ் புரவைடர்களாகவே கருதப்படுவார்கள்.
பில்டர் பொருளை விற்பவரா? அல்லது சேவை செய்பவரா? என்ற குழப்பம் ஜி.எஸ்.டியில் கிடையாது. மேலும் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் கேபிடல் பொருட்களுக்கும் சேர்த்து உள்ளீட்டு வரி எடுக்கலாம்.
உதாரணம் ஒரு பில்டர் ரெடி மிக்ஸ் கான்கிரீட்
மெஷின் வாங்கினால் அதற்கான ஜி.எஸ்.டியையும் அவர் உள்ளீட்டு வரி எடுக்கலாம். இனிமேல் பில்டர்கள் என்ன செய்ய வேண்டும்? என்றால், முதலில் இன்வாய்ஸ் போடத் துவங்க வேண்டும். அந்த இன்வாய்சுக்கு எத்தனை % ஜி.எஸ்.டியோ அதை போட வேண்டும். அதாவது 10 லட்ச ரூபாய் கட்டுமானச் செலவு என்றால் (லாபம் சேர்த்து) எஸ்.ஜி.எஸ்.டி 9%, சி. ஜி.எஸ்.டி 9% ஆக மொத்தம் 18%. 10 லட்சம் + 18 %, ஆக மொத்தம் 11,80000 க்கு பில்டர்கள் இன்வாய்ஸ் போடுவார்கள். அதற்குப் பிறகு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற 1,80000 த்தை என்ன செய்ய வேண்டும் என்றால், அந்த புராஜெக்ட்டுக்காக வாங்கிய சிமெண்ட் ஸ்டீல், டைல்ஸ் இத்தியாதிகள் மற்றும் அலுவலக செலவினங்கள் ஆகியவற்ஷீற்காக அவர் செலுத்திய ஜி.எஸ்.டியை கழித்து அதன் தொகை 1,45000 என்றால், மீதி உள்ள 35,000 த்தை மட்டும் அவர் வரியாக செலுத்தினால் போதும். இது தான் ஜி.எஸ்.டி கிரேடிட் ஆகும். இதனால் பில்டர் தனாகவே அடுத்த புராஜக்ட்டின் விலையை குறைக்கத் துவங்குவார்.
அதாவது ஒரு பில்டர் ஒரு வீடுகட்டுவதற்கு பலவகை கட்டுமானப் பொருட்களை ஜி.எஸ்.டி செலுத்தித் தான் வாங்கி இருப்பார். எனவே, கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு வாடிக்கை யாளர்களிடமிருந்து வாங்கிய ஜி.எஸ்.டியால் கிரேடிட் கிடைக்கிறது. அதாவது வரிக்கு வரி என்ற முறை ஒழிந்து போய் ஒரு பொருளுக்கு ஒரு முறை என்ற வரி என்றாகிவிட்டது”.
மொத்தம் மற்றும் சில்லரை கட்டுமானப்பொருள் விற்பனையாளர்கள். ஜி.எஸ்.டி குறித்து கவனிக்க வேண்டியவை என்ன?
“அவர் சிமெண்ட் விற்பனையாளர் என வைத்துக் கொள்வோம். முன்பெல்லாம் நீங்கள் சிமெண்ட் வாங்கும் போது 14.5% வாட் வரி குறிப்பிடப்பட்டு இருக்கும். ஒரு சிமெண்ட் நிறுவனம் 1,00000 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் தயாரிக்கிறது என்றால் எக்சைஸ் வரியை சேர்த்து 1,12500 ரூபாய்க்கு பில்போட்டு விநியோகிஸ்தர்க்கு அனுப்பி வைக்கும். விநியோகிஸ்தர் 1,12,500 ரூபாயை அவருடைய காஸ்டாக எடுத்துக் கொண்டு 2500 ரூபாயை அவருடைய மார்ஜினாக போட்டு 1,15000 ரூபாயும் கூடுதலாக 14.5% வாட்டும் சேர்ப்பார்.
விநியோகிஸ்தர் செலுத்திய 1,15000 ரூபாயில் 12.5% எக்சைஸ் வரி மறைந்திருக்கிறது. இதை பில்டர் முன்பு கிரடிட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், ஜி.எஸ்.டியில் கிரேடிட்டாக எடுத்துக் கொள்ள முடியும். எனவே, இனி விநியோகிஸ்தர்கள் தனது இலாபத்தொகைக்கான ஜி.எஸ்.டியை மட்டும் தான் கட்டுவார்கள்”.
ஜி.எஸ்.டி முறை சிறு குறு கட்டுனர்களையும் வீடுகட்டும் பொதுமக்களையும் பாதிக்குமா?
“தமக்கென சொந்தமாக எஞ்சினியர் அல்லது மேஸ்திரியை வைத்து பொதுமக்கள் வீடு கட்டினால், அவர்களுக்கோ அல்லது சம்பளம் மற்றும் சேவைகளுக்காக ஜிஎஸ்டி கட்ட வேண்டியதில்லை. அதே போல் ஒரு சிறு குறு பில்டர் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு கீழே விற்பனை வரை ஜி.எஸ்.டி இல்லை. அது மட்டுமல்ல, ஒரே ஒரு கிச்சன் வைத்து தனி வீடு கட்டும் போது ( அது ஒரு ஒருங்கிணைந்த குடியிருப்பாக அல்லாமல் இருந்தால்) அதற்கு பில்டர் ஜிஎஸ்டி போட வேண்டியதில்லை. அதைதாண்டும் போது, ஜிஎஸ்டி செலுத்தி தான் ஆக வேண்டும். ஒரு வீட்டு முதலாளி வீட்டை வாடகைக்கு கொடுத்தால் அதற்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது. அதே சமயம் அந்த முதலாளி வீட்டை வியாபாரத்திற்காக கொடுத்தால் ஜி.எஸ்.டி வரி உண்டு”.
கார்பென்டிங், பிளம்பிங், பெயிண்டிங், எலக்டிரிக்கல் போன்ற சிறுசிறு துணைத் தொழில்கள் செய்யும் வேலையாட்கள் இதனால் பாதிக்கப்படுவார்களா?
“தனிநபர்கள், சிறு சிறு பணிகளைச் செய்யும் காண்ட்ராக்டர்களுக்கு இதனால் பாதிப்பில்லை. இவர்களுக்கு வருடத்திற்கு 20 லட்ச ரூபாய் வரை விற்பனைக்கு வரி இல்லை. மிகச்சிறு கட்டுநர்களை, காண்ட்ராக்டர்களை ஜி.எஸ்.டி பாதிக்காது. ஆனால், ஜி.எஸ்.டி வளையத்தில் இணைவது என்பது அவர்களுக்கு பாதுகாப்பானது. சமூகத்தில் நாணயமிக்க நிதி பரிவர்த்தனை செய்பவர்கள் என்ற பட்டியலில் இவர்கள் வந்து விடுவார்கள். ஆனால், இவர்கள் ஜிஎஸ்டிவளையத்தில் இல்லாமல் இருந்தாலும், கடையில், டீலர்களிடமிருந்து பெறுகிற கட்டுமானப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி செலுத்தியாக வேண்டும்”.
வேறு யாருக்கெல்லாம் ஜிஎஸ்டி கிடையாது?
“நிலம், வீடு இரண்டையும் கட்டி அதை ஒரு என்ட் புராடக்டாக விற்கும் போது, ஜிஎஸ்டி கிடையாது. அதாவது, ஒரு மனையில் வீடு கட்டி, முடித்து பணி நிறைவுச் சான்ஷீதழ் வாங்கி விற்பனைக்குத் தயாராக இருக்கிறது. இப்போது மனை மற்றும் வீட்டுக்கு சேர்த்து ஸ்டாம்ப் டியூட்டி கட்டப் போகிறேன். என்றால், அதற்கு ஜிஎஸ்டி இல்லை. அதாவது ‘ரெடிடூ ஆக்குபை’ ஃபிளாட்டுகளுக்கு ரெஜிஸ்ட்ரேஷ்ன் மற்றும் ஸ்டாம்ப் டியூட்டி கட்டுவதால் ஜிஎஸ்டி இல்லை. இதனால், கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாத ஃபிளாட்டுகளின் விற்பனை கனஜோராக இருக்கும்.
அதுவே, கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் தவணை முறையில் பணம் செலுத்தும்போது ஜிஎஸ்டி கட்ட வேண்டும். மேலும், செகண்ட் ஹாண்ட் ஃபிளாட் விற்பனைக்கு ஜிஎஸ்டி கிடையாது. மனை விற்பனைக்கு ஜிஎஸ்டி கிடையாது.
ஜிஎஸ்டி வேண்டவே வேண்டாமென்று ஒதுங்க முடியாதா?
‘‘ஏன் ஒதுங்க வேண்டும்? அதில் ஏகப்பட்ட வரிச்சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். நல்ல அங்கீகாரம் கிடைக்கும். முன்பே சொன்னபடி 20 லட்சம் வரை, விற்பனை உள்ளவர்களுக்கு வரி இல்லை. ஆனால், பில்களைப் பிரித்துப் போடுவது, வெவ்வேறு பெயர்களில் தொழில்களைச் செய்வது இதெல்லாம் இனி நடக்காது. உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சிமெண்டை ஒரு டீலரிடமிருந்து வாங்குகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு இல்லாமல் இருந்தால், அந்த டீலர் யாருக்கெல்லாம் அன் ரிஜிஸ்டர்ட் ஆட்களிடம், நிறுவனங்களிடம் சிமெண்ட் விற்றார் என வரித்துறையினர் கணக்கெடுத்து, ஒருநாள் உங்கள் முன்வந்து நிற்பார்கள். பின்பு ஒரு பெருந்தொகையை அபராதமாக நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
ஜிஎஸ்டியினால் விலை கூடப் போவதில்லை, எனவே, ஜிஎஸ்டி பதிவு செய்யுங்கள், வரி கட்டுங்கள், அங்கீகாரம் பெறுங்கள்.அச்சமற்று தொழில் செய்யுங்கள்” என்கிறார் திரு.சுப்பிரமணியன்.
ஆக, கட்டுநர்கள், கட்டிடத்துறைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஜிஎஸ்டி பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் :
1. ஆண்டிற்கு ரூ.20 லட்சத்திற்கு குறைவாக விற்பனை உள்ளவர்களுக்கு வரி கிடையாது.
2. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு வரி கிடையாது. (பணிநிறைவுச் சான்றிதழ் பெற வேண்டும்).
3. வரி விகிதங்கள் குரூப் செய்யப்பட்டு, முறைப்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர பெரிய விலை உயர்வு கிடையாது.
4. பழைய ஃபிளாட்டுகள் , மனை விற்பனைக்கு ஜிஎஸ்டி கிடையாது.
5. பில்டர்கள் இனி ஜிஎஸ்டி கிரெடிட் பெற்று அதன் பலனை நுகர்வோருக்கு தரலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஜிஎஸ்டி யில் பதிவு செய்து கொள்வது அனைத்து விதமான நிறுவனங்களுக்கும் மிகுந்த பலன் அளிக்கக்கூடியது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066847
|