பெரு மழையும், வெள்ளமும் வந்த பிறகு பலரும் தங்கள் வீட்டின் அஸ்திவாரம் பற்றி கவலைகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அஸ்திவாரம் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற பதற்றம் எல்லோருக்கும் வந்துவிட்டது. ஆனால், முறையாக அஸ்திவாரம் போட்டால் வெள்ளமோ, நில நடுக்கமோ எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அஸ்திவாரம் போடும்போது கவனித்தக்க பல விஷயங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
>> முதலில் நாம் கட்டும் வீடு பல ஆண்டுகளுக்கு நிலைக்க வேண்டும் என்று நினைப்போம். அதற்கு வலுவான அஸ்திவாரம் அவசியம். மொத்த கட்டிடத்தையும் தாங்கி நிற்பது அஸ்திவாரம்தான். எனவே அஸ்திவாரம் வலுவானதாக மட்டுமல்ல, மிகவும் ஆழமாகவும் அமைக்கப்பட வேண்டும்.
>> எந்தப் பகுதியில் வீடு கட்டுகிறோமோ அந்தப் பகுதியின் மண்ணின் தன்மையைப் பற்றி ஆராய வேண்டும். ஒவ்வொரு மண்ணின் தன்மையும் ஒவ்வொரு விதமாகக் கட்டிடத்தைத் தாங்கும் தன்மை கொண்டவை. எனவே மண்ணின் தாங்கு திறனைப் பொறுத்தே கட்டிடத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். மண்ணின் தாங்கு திறனில் குறைபாடு இருந்தால் கட்டிடத்தில் சிக்கல் வந்துவிடும்.
>> மண்ணின் தாங்கு திறனை உறுதிசெய்ய வேண்டும் என்றால் அதற்கு மண் பரிசோதனை மிகவும் அவசியம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் தாங்கு தன்மையைக் கண்டறிய முடியும். அதற்கு ஏற்றார்போல வலுவான தாங்கும் தூண்களையும், அஸ்திவாரத்தையும் அமைக்க முடியும் என்பதால், மண் பரிசோதனையில் சமரசம் செய்துகொள்ளாதீர்கள்.
>> மழை, வெள்ளம், நிலநடுக்கம் என எந்த இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டாலும், அதைத் தாங்கும் வகையில் அஸ்திவாரம் இருக்க வேண்டும். அதற்கு மண்ணின் தன்மையை ஆராய வேண்டும். கட்டுமானம் நடைபெறும் இடத்தில் உள்ள மண் எந்த வகையானது, அது அஸ்திவாரத்துக்கு உறுதுணையாக இருக்குமா என்பதையெல்லாம் உறுதி செய்ய வேண்டும்.
>> அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் வீடு கட்டுபவர்கள் கட்டாயம் மண் பரிசோதனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தனி வீட்டைவிட அடுக்குமாடி குடியிருப்பில் அதிக வீடுகள் கட்டப்படும் என்பதால் மண்ணின் தாங்கும் திறன் எவ்வளவு, அடுக்குமாடி அமைந்துள்ள இடத்தின் மண் தன்மை எப்படி உள்ளது, அஸ்திவாரம் எவ்வளவு ஆழத்தில் போடப்பட்டுள்ளது என்பதில் கவனம் தேவை.
>> குறிப்பாக மண் எவ்வளவு எடையைத் தாங்கும் என்பதை மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்ப கட்டிடத்தின் உயரத்தை எழுப்ப வேண்டும். இஷ்டத்துக்கு எழுப்பினால் இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது சிக்கல் வந்துவிடும்.
>> மண் பரிசோதனை என்றால் மனையில் உள்ள மண்ணை எடுத்துக் கொடுப்பது அல்ல. மனையில் சில மீட்டருக்குத் துளையிட வேண்டும். ஒரு இடத்தில் மட்டுமல்லாமல் மனையின் பல இடங்களில் மண்ணை எடுத்துப் பரிசோதிப்பது மிக அவசியம்.
>> பல இடங்களில் மண்ணை எடுப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. மனையின் மேல் மட்டத்தில் ஒருவகை மண் இருக்கும். உள்ளே வேறு வகை மண் இருக்கலாம். தற்போது பல மனைகளும் பள்ளமான இடத்திலேயே உள்ளது. பள்ளமான மனையில் மண்ணை நிரப்பி மேடாக்குகிறார்கள். அந்த இடத்தை விற்பவர்கள் இதுபோன்ற மனையில் கூடுதல் கவனம் தேவை. வெவ்வேறு மண் கலந்திருப்பதால் அதன் மண்ணின் தாங்கு திறன் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை துல்லியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற மனையில் ஆழமாகப் பள்ளம் தோண்டி மண்ணை எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்புவதே நல்லது.
>> சென்னையில் வெள்ளம் சூழ்ந்த இடங்கள் எல்லாமே ஏரிக்கு அருகேயோ, நீர் நிலைகளுக்கு அருகேயோ இருந்தவைதான். ஏற்கெனவே நீர் நிலை பகுதிகளாக இருந்திருந்தால் மண் பரிசோதனை செய்து மண்ணின் தாங்கு திறனை மதிப்பிட வேண்டும். இங்கே மிக ஆழமான அஸ்திவாரத்தை அமைத்தே வீடு கட்ட வேண்டும்.
>> இப்போது விளை நிலங்களில்கூட கட்டுமானங்கள் நடைபெறுகின்றன. விவசாய மண் எந்த ரகத்தை சேர்ந்தது என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். அங்கே கட்டிடம் கட்டும் அளவுக்கு மண்ணின் தன்மை உள்ளதா என்பதை முன்கூட்டியே ஆராய்ந்துவிட வேண்டும்.
>> விவசாய நிலங்களில் உள்ள மண் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையைச் சோதிக்கப் பார்க்க தவற வேண்டாம். ஒரு வேளை ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை இருந்தால் மழைக் காலங்களிலோ, வெள்ளக் காலத்தில் வீட்டைச் சுற்றி தண்ணீர் சூழந்தால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுபோன்ற மண்ணில் தாங்கு திறனைவிட மிக வலுவான அஸ்திவாரம் அமைப்பதே நல்லது. ஏற்கெனவே வீடு கட்டி முடித்துவிட்டால் அஸ்திவாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066761
|