சுற்று சூழலுக்கு ஏற்ற மறுசுழற்சி கட்டுமானக்கல்

22 ஜனவரி 2024   05:30 AM 27 ஜூலை 2018   11:34 AM


சுற்றுச்சூழல் வேகமாகப் பாதிக்கப்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில் மறுசுழற்சி பொருட்களுக்கு மவுசு கூடிக் கொண்டே வருகிறது. கட்டுமானத் துறையிலும் மறுசுழற்சி பொருட்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. இதைப் புரிந்துகொண்ட இங்கிலாந்து நிறுவனம் ஒன்று மறுசுழற்சி கட்டுமானப் பொருட்களை செய்து அசத்தி வருகிறது.

 

தமிழகத்தில் செங்கல்லுக்கு மாற்றாக ஃபிளை ஆஷ் கற்களை கட்டுமானத் துறையில் அதிகம் பயன்படுத்தி வருவது எல்லோருக்கு தெரிந்த விஷயம்தான். நிலக்கரியை எரித்து கழிவாகும் சாம்லை வாங்கி வந்து பலரும் குடிசைத் தொழில் போல ஃபிளை ஆஷ் கற்களை உற்பத்தி செய்து வருகிறார்கள். இங்கிலாந்திலும் இதுபோன்ற மறுசுழற்சி கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பது ஊக்குவிக்கப்படுகின்றன.

 

குறிப்பாக இங்கிலாந்தில் உள்ள லிக்னாசைட் என்ற நிறுவனம் மறுசுழற்சி கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிறுவனம் ‘கார்பன் பஸ்டர்’ என்ற ஒரு கட்டுமானப் பொருளை தயாரித்து வருகிறது. இதை கட்டுமானக் கட்டி என்றழைக்கிறார்கள். இந்த கார்பன் பஸ்டர் பாதி அளவுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களாலே தயாரிக்கப்படுகிறது.

 

இந்த கார்பன் பஸ்டர் எப்படி செய்யப்படுகிறது தெரியுமா? பெரிய ஆலைகளில் பழையக் குப்பைகளை எரிப்பார்கள் அல்லவா? அப்படி எரித்தபின் கரியாகும் குப்பையைக் கொண்டு இந்த கார்பன் பஸ்டரைத் தயாரிக்கிறார்கள். கார்பன் பஸ்டரில் அப்படி என்ன சிறப்புகள் இருக்கின்றன என்றுதானே நினைக்கிறீர்கள்? இது கார்பன் டை ஆக்ஸைடை (கரியமில வாயு) உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றது. கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுக்கொள்வதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டுமானப் பொருளாக இது பார்க்கப்படுகிறது.

 

சுமார் ஒரு டன் எடை கொண்ட கார்பன் பஸ்டர், 14 கிலோ அளவுக்கான கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளிழுத்துக் கொள்ளுமாம். இந்தக் கல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் கார்பன் பஸ்டரை ஆராய்ந்து பார்த்தது. அந்த ஆய்விலும் கார்பன் பஸ்டருக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டது. இதையடுத்து கார்பன் பஸ்டர் தயாரிப்பு இங்கிலாந்தில் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

 

இந்தக் கல்லை எப்படி செய்கிறார்கள்? அனல் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற ஆலைகளில் ஏராளமான பொருட்கள் எரிக்கப்படு. சாம்பலாக கழிவுகள் அதிகளவில் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் கழிவுகளுடன் தண்ணீரைக் கலந்து, புது வகையான கட்டுமானப் பொருளைத் தயாரிக்கிறார்கள். இந்த கார்பன் பஸ்டர் கட்டுமானப் பொருளை செங்கல்லாகவும், ஜல்லிக் கற்களுக்கு மாற்றாகவும் இங்கிலாந்தில் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

 

கார்பன் பஸ்டரைத் தயாரிக்க அனல் மின் நிலைய கழிவுகள் மட்டுமின்றி மரச் சீவல், கண்ணாடி, கிளிஞ்சல்களைக் கொண்டும் தயாரிக்க முடியுமாம். இதுபோன்ற பொருட்களைக் கொண்டு கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும்போது கார்பன் டை ஆக்ஸைடு வாயும் குறைந்த அளவே வெளிப்படுவதால் சுற்றுச்சூழல் ஏற்ற கட்டுமானப் பொருளாக கார்பன் பஸ்டர் பார்க்கப்படுகிறது.

 

எனவே இங்கிலாந்தில் புது வீடு கட்டுபவர்கள் கார்பன் பஸ்ரைக் கொண்டே கட்டுகிறார்கள். கார்பன் டை ஆக்ஸைடு வாயுவைக் குறைவாக வெளியிடும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டே கட்ட வேண்டும் என்றும் இங்கிலாந்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த இலக்கை எட்டவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

சுற்றுச்சூழல் மாசு வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வரும் நிலையில் இது போன்ற சுற்றுச்சூழலை ஆராதிக்கும் கட்டுமானப் பொருட்களுக்கு வரவேற்பு கூடுவதில் வியப்பில்லைதானே!

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066762