ஸ்டீல் கான்கிரீட் என்றால் முழுக்க முழுக்க இரும்பினால் ஆன கான்கிரீட் அல்ல. வழக்கமான கான்கிரீட்டில் இரும்பு இழைகளை கலந்து தயாரிப்பதுதான் ஸ்டீல் கான்கிரீட் எனப்படும் எஸ்.எஃப்.ஆர்.சி ஆகும். ஸ்டீல் ஃபைபர் ரீ இன்போர்ஸ்ட் கான்கிரீட். ((STEEL FIBER REINFORCED CONCRETE) இதைச் சுருக்கமாக எஸ்எஃப்ஆர்சி என்பார்கள். கான்கிரீட்டிற்கு வலு சேர்ப்பதற்கு வழக்கமாக பல பொருட்களைப் பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் இரும்புக் கம்பிகள்தான் முதல் தேர்வாக இருக்கும். இதில் பல புதிய தொழிற்நுட்ப முன்னேற்றங்களைப் புகுத்துகிறார்கள். அவற்றுள் ஒன்றுதான் இரும்பு இழைகளைக் கலந்து கான்கிரீட்டிற்கு வலு சேர்ப்பது.
எங்கே பயன்படுத்தலாம்?
எஸ்எஃப்ஆர்சியை எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்றால் அதிகப்படி போக்குவரத்து, உராய்வுக்கு வாய்ப்புள்ள இடங்களில் பயன்படுத்தலாம். தொழிற்சாலைகளின் தரைகளை உருவாக்குவதற்கு இந்த முறை பொருத்தமானது. கிடங்குகள், துறைமுகங்கள், விமான தளங்கள், நெடுஞ்சாலைப் பரப்புகள் போன்றவற்றிற்கும் அவசியம் தேவைப்படுவது.
உலகின் பல பாகங்களிலும் இந்த முறையில் கான்கிரீட்டை வலுவூட்டும் உத்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போதெல்லாம் அதிக அளவில் சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய கட்டுமானங்களை வலுவுள்ளவையாக ஆக்குவதற்கு எஸ்எஃப்ஆர்சி ஏற்றது. இந்தியாவில் இந்த உத்தியைப் பெருமளவில் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. உருவாக்குவதும் பயன்படுத்துவதும் எளிது என்பதால் தேவையும் கணிசமாக உயர்ந்து கொண்டு வருகிறது.
எஸ்எஃப்ஆர்சியை எப்படித் தயாரிக்கிறார்கள்?
வழக்கமான முறையில் கான்கிரீட் தயாரிக்கும் உத்திகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். துண்டு துண்டான இரும்பு இழைகளைக் கலவையுடன் தூவிப் பயன்படுத்துவது எஸ்எஃப்ஆர்சி தயாரிப்பில் முக்கியக் கட்டமாகும்.கலவை இறுகிய பின் அதில் கலக்கப்பட்ட இரும்பு இழைகள் கலவையை உறுதி மிக்கதாகச் செய்கின்றன. உடைதல், நொறுங்குதல் ஆகிய குறைபாடுகள் களையப்படுகின்றன. மோதலை எதிர்கொண்டு தாக்குப் பிடிக்கும் திறன் உயர்கிறது. வெடிப்புகள் ஏற்படுவதும் குறைக்கப்படுகிறது.
இரும்பு இழைகள் பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. நீள நீளமான கம்பித் துண்டுகளைப் போல் உள்ளவை இருக்கின்றன. சுருள், முடிச்சு போன்ற வடிவங்களிலும் கிடைக்கின்றன. பசைத் தன்மை கொண்ட கலவையில் முக்கி எடுக்கப்பட்ட இழைகளும் உண்டு. கலவைக்குள் இவை குறுக்கும் நெடுக்குமாக, இன்ன வடிவம் என்கிற ஒழுங்கில்லாமல் பரப்பப்படுகின்றன. இவ்வாறு இந்த இழைகள் ஆங்காங்கே இடம் பெற்றிருப்பதால், வெடிப்புகள் இவற்றைக் கடந்து பரவுவது தடுக்கப்படுகிறது. வெடிப்புகளின் பாதையில் இந்த இழைகள் குறுக்கே நிற்கின்றன. எனவே, வெடிப்புகள் மேற்கொண்டு பரவாமல் நின்றுவிடும்.
இரும்பிலேயே பல வகைகள் இருக்கின்றன இல்லையா? ஆகவே, இரும்பு இழைகளிலும் பற்பல வகைகள் சாத்தியமே. மென்னிரும்பு, கால்வனைஸ் செய்யப்பட்ட இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்று பல வித இழைகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புண்டு.
எஸ்எஃப்ஆர்சிக்குத் தேவை உள்ள இடங்கள்
எஸ்எஃப்ஆர்சி என்பது அப்படியென்ன பிரமாதம்? கான்கிரீட் கலவையைத் தயாரிக்கும்போது அத்துடன் இரும்பு இழைகளைத் தூவிவிட்டுக் கலக்கினால் தீர்ந்தது என்று பலரும் எளிதாக எடுத்துக் கொள்வார்கள். அது தவறான கருத்து. குறிப்பிட்ட தேவைக்காக, தனிப்பட்ட விதத்தில் கலவை விகிதம், இழையின் தன்மை ஆகியவற்றைக் கணக்கிட்டு எஸ்எஃப்ஆர்சியை உருவாக்க வேண்டும்.ஏனெனில் எஸ்எஃப்ஆர்சியைப் பலவிதத் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறோம்.
அணைகள், பாலங்கள் போன்ற தண்ணீருடன் தொடர்பு ஏற்படுத்தக் கூடிய கட்டு மானங்களுக்கு எஸ்எஃப்ஆர்சி மிகவும் ஏற்றது. புதிதாக மதகுகள் அமைப்பதற்கும், பழுதுபட்டவற்றை மாற்றுவதற்கும் எஸ்எஃப்ஆர்சியைப் பயன்படுத்தலாம்.நவீன விமான தளங்கள், தரம் உயர்ந்த நெடுஞ்சாலைகள் போன்றவற்றின் தரைப்பரப்பு மிகுந்த பயன்பாட்டு நோக்கத்திற்காக உருவாக்கப்படுபவை. அவற்றின் கனம் மெல்லியதாக இருப்பது விரும்பப்படுகிறது. இதை நிறைவேற்றுவதற்கு ஏற்ற கட்டுமானப் பொருள் எஸ்எஃப்ஆர்சிதான்.
தொழிற்சாலைகளின் தரைகள் பல்வேறு விதமான மோதல்களைத் தாக்குப் பிடிக்க வேண்டி வரும். கனமான பகுதிகளைத் தூக்கிப் போடுவார்கள். அந்த மோதலை தரை தாங்க வேண்டும். அங்குமிங்கும் இழுத்துச் செல்லப்படும் உலோகப்பொருட்களால் தரையில் கீறல்கள் ஏற்படக் கூடாது. சூடு மிகுந்த, குளிர்ச்சி மிகுந்த பொருட்களையும் ஆலைத் தரைகளில் போட வேண்டி வரலாம். அம்மாதிரியான வெப்ப மாறுதல்களையும் தாக்குப் பிடிக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் எஸ்எஃப்ஆர்சியால் ஆகிய தரைதான் பொருந்தி வரும்.
உலைக்களங்களை அமைப்பதற்கும் எஸ்எஃப்ஆர்சியைத் தேர்வு செய்யலாம். கணிசமான அளவில் அலுமினா கலந்துள்ள சிமெண்டை இந்த மாதிரியான வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்.குடித்தனத் தேவைகளுக்கான கட்டடங்களைக் கட்டும்போது அடித்தளம் அமைக்கும் பணிகளை எஸ்எஃப்ஆர்சி கொண்டு செய்யலாம்.பாலங்களை விரைவாக அமைக்கவும், எளிதான வடிவமைப்பிற்கும் எஸ்எஃப்ஆர்சியைப் பயன்படுத்தலாம். சுரங்கங்கள், குகைகள் போன்றவற்றைப் பலமுள்ள வகையில் தாங்கிப் பிடிப்பதற்கும் எஸ்எஃப்ஆர்சி கட்டுமானங்களை உபயோகிக்கலாம்.நில நடுக்கத்தைத் தாக்குப் பிடிக்க உதவும் கட்டடங்களைக் கட்டுவதற்கும் எஸ்எஃப்ஆர்சியைப் பயன்படுத்தலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066758
|