கட்டிடக் கழிவுகளால் கட்டிடம்

23 ஜனவரி 2024   05:30 AM 24 ஜூலை 2018   05:51 PM


இந்தியா போன்று மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் குப்பைகளைக் கையாள்வது என்பது மிக சிக்கலான, சவாலான விஷயம். குப்பைகளில் கட்டிடக் கழிவுகளும் அடக்கம். கட்டிடக் கழிவுகளால் பல நீர் ஆதாரங்கள் காணாமல் போகும் நிலை வந்துள்ளதாகச் சுற்றுச்சூழல் அறிஞர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் கட்டிடக் கழிவுகளை மேலாண்மை செய்வதில் டெல்லி முன்னணியில் இருக்கிறது. கட்டிடக் கழிவுகளைக் கையாள்வதில் டெல்லி மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் வரவேற்றுள்ளது.

 

டெல்லி அரசு சமீபத்தில் பொதுப்பணித் துறைக்கு வழங்கிய அறிவுறுத்தலின்படி, டெல்லி அரசு சார்ந்த நிறுவனங்கள் அளிக்கும் கட்டுமான ஒப்பந்தங்களில் கட்டுமானக் கழிவிலிருந்து மறுசுழற்சியின்மூலம் தயாராகும் 2 சதவீதப் பொருட்களை அரசின் கட்டுமானங்களில் பயன்படுத்துவது, சாலைகள் போடும் பணிக்கு 10 சதவீதம் மறுசுழற்சி பொருட்களைப் பயன்படுத்துவது, கட்டுமான நிறுவனங்கள் 5 சதவீதம் மறுசுழற்சி பொருட்களைத் தங்களின் கட்டுமானங்களில் பயன்படுத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

 

மாறாத கணக்கெடுப்பு
மத்திய நகர் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இந்தியாவில் கடந்த 2000-ல் நடத்திய ஆய்வில், கட்டுமானத் தொழிலின் மூலம் ஓர் ஆண்டுக்கு 10 முதல் 12 மில்லியன் டன் கழிவுகள் உண்டாகின்றன எனக் கணக்கிட்டுள்ளது. 2015-லும் இந்த அளவு மாறாமல் இருப்பதை அமைச்சகத்தின் அறிக்கை உறுதிசெய்துள்ளது.

 

தொழில்நுட்பப் போதாமை
சிமென்ட், செங்கல், கம்பிகள், கற்கள், மரம், பிளாஸ்டிக், மற்றும் இரும்புக் குழாய்கள் போன்ற முக்கிய கட்டுமானப் பொருட்கள் மூலம் உண்டாகும் கழிவுகளில் 50% கூட மறுசுழற்சி செய்வதில்லை. மேலும் இந்தியக் கட்டுமானத் தொழிற்சாலைகளில் 70% மறுசுழற்சி பற்றிய தொழில்நுட்பங்களை அறிந்திருக்கவில்லை.

 

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கட்டுமானக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் அமைச்சகம் டெல்லியில் ஏற்படும் கட்டுமான மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் ஏற்படும் மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும் இந்த விதிமுறைகளை மற்ற நகரங்களில் உள்ள கட்டுமானத் துறைகளிலும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளது.

 

மாசு நகரமான டெல்லி
ஒவ்வொரு நாளும் டெல்லியில் 4,000 முதல் 4600 டன் குப்பை உருவாகிறது. இது நீர்நிலைகள், சாலை ஓரங்கள் எனப் பல இடங்களில் கொட்டப்படுகிறது. ஆனால் இதில் 10% கழிவுகள் மட்டுமே அகற்றப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மாசடைந்த நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பிரச்சினையைத் தீர்க்கும் 3 அம்சங்கள்
கட்டுமானப் பொருட்கள் மற்றும் இடிபாடுகள் மேலாண்மையில் புதிய பொருட்களைக் கூடிய மட்டும் குறைப்பது, மறு பயன்பாடு மற்றும் மறு சுழற்சி ஆகிய மூன்று அம்சங்கள் முன்வைக்கப்படுகின்றன.

 

தேவையும் போதாமையும்

2012-ல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, மண், தாதுக்களைத் தேவைக்கு அதிகமாகத் தோண்டி எடுப்பதை முறைப்படுத்தியது. கட்டுமான வேலைகளுக்கான தேவை ஒருபக்கம். அவற்றை அளவுக்கு மீறிச் சுரண்டுகிறார்கள் எனச் சுற்றுச்சுழல் அறிஞர்களின் கோபம் ஒருபக்கம். இரண்டு பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு மறு பயன்பாடும், மறு சுழற்சியும் இந்திய அரசால் முன்வைக்கப்பட்டன.

நாடு தழுவிய விழிப்புணர்வுக்குத் தடையாக இருப்பவை
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாநகராட்சி திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2015 பட்டியலில், கட்டுமானம் மற்றும் இடிபாடுகளால் உண்டாகும் கழிவுகளைக் கொண்டு புதிய கட்டுமானங்களில் மறு பயன்பாடு, மறு சுழற்சி செய்வதற்கான கொள்கைகள், விதிகளாக இடம்பெறவில்லை. இதனை அந்த விதிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

 

சட்டபூர்வமான அணுகுமுறை அவசியம்
கட்டிடக் கழிவுகளை மறு சுழற்சி மூலம் புதிய கட்டுமானங்களில் அவற்றைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் இன்றைக்குப் பெருகியுள்ளன. ஆனால் இந்தத் தொழில்நுட்பங்களைத் தங்களின் கட்டுமானங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கு இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் பெரிதும் தயங்குகின்றன. காரணம், இந்தியத் தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்களைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால்தான். இதற்குச் சட்டரீதியான பாதுகாப்பு தேவைப்படுகிறது.

 

இயற்கையாகக் கிடைக்கும் மணல் தாதுக்கள் போன்ற இயற்கை வளங்களைக் கொண்டு அமைக்கப்படும் கட்டுமானங்களையே தற்போதைய இந்தியக் கட்டுமானச் சட்டம் அனுமதிக்கிறது. கட்டுமான, இடிபாடுகளிலிருந்து கிடைக்கும் கழிவை மறு சுழற்சி செய்து உருவாக்கும் பொருளை, கான்கிரீட் கலவையில் ஒருபகுதியாகப் பயன்படுத்துவதற்கு இந்தியத் தரக்கட்டுப்பாட்டின் அனுமதி விரைவில் கிடைக்கும் என்னும் சூழல் உருவாகியுள்ளது.

 

நகராட்சி, மாநகராட்சிகளின் ஒத்துழைப்பு
ஒரு மாநிலத்தின் திடக் கழிவு மேலாண்மை சிறப்பாக இருப்பதற்கு அம்மாநிலத்தின் நகராட்சிகள், மாநகராட்சிகளின் பங்கு இன்றியமையாதவை. உதாரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் திடக் கழிவு மேலாண்மை அறிமுகப்படுத்தியபோது, கட்டுமான மற்றும் இடிபாடுகளால் உண்டாகும் கழிவையும் அந்தத் திட்டத்தோடு சேர்த்தது. மும்பை மாநகராட்சி கட்டுமான, இடிபாடுகள் கழிவு மேலாண்மையை 2006-ல் உண்டாக்கியது. கட்டுமானத்திலிருந்து கிடைக்கும் கழிவிலிருந்தும் இடிபாடுகளிலிருந்து கிடைக்கும் கழிவிலிருந்தும் மறு பயன்பாடு பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நவி மும்பையில் உருவாக்கப்பட்டது. ஆனால் மாநில அரசு இந்தத் திட்டங்களை வரவேற்காததால், 2009-ல் இந்தத் தொழிற்சாலை மூடப்பட்டது.

 

கட்டுநர்கள் கையில் எடுத்த மறு பயன்பாடு, மறு சுழற்சி
சட்டபூர்வமான அங்கீகாரம் கட்டுமான கழிவிலிருந்து உருவாக்கப்பட்ட மறு பயன்பாடு பொருட்களுக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே சூர்யா ககானி போன்றவர்கள், தங்களின் கற்பனை வளத்தால், பல கட்டுமானங்களை உருவாக்கினர். புஜ் மாவட்டத்தில் பூகம்பத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளின் கழிவுகளிலிருந்து, சூர்யா ககானி ராஜ்காட்டில் ஒரு பள்ளிக் கட்டிடத்தை உருவாக்கியுள்ளார்.

 

உலக அளவில் கட்டுமானக் கழிவு மறு பயன்பாடு
உலகம் முழுவதும் பல நாடுகளில் புதிய கட்டுமானங்களுக்குப் பழைய கட்டுமான, இடிபாடுகளின் கழிவிலிருந்து பெறப்படும் பொருட்களை மறு பயன்பாடு, மறு சுழற்சி செய்யும் போக்கு அதிகரித்துள்ளன. சிங்கப்பூரில் 98 சதவீதம் புதிய கட்டுமானங்களுக்கு மறு சுழற்சி முறையே பின்பற்றப்படுகிறது. இங்கிலாந்தில் 2004-ல் கட்டுமானங்களில் மறுசுழற்சி பொருட்களைப் பயன்படுத்துவதை சட்டபூர்வமாக்கியது. ஆண்டுதோறும் 280 மில்லியன் டன் அளவுக்கு மறு சுழற்சி பொருட்கள் இங்கிலாந்தின் மொத்த கட்டுமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

 

முன்னெடுக்க வேண்டியவை
கான்கிரீட் கலவை போன்ற விஷயங்களில் மறு சுழற்சி பொருட்களைப் பயன்படுத்துவதற்கான சட்ட அங்கீகாரத்தை வழங்கும் BIS குறியீட்டை தரநிர்ணயம் செய்ய வேண்டும்.

 

முனிசிபல் திடக்கழிவு மேலாண்மை 2015 விதியை எல்லா நகரங்களின் நகராட்சி மையங்களிலும் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

 

டெல்லி மற்றும் அனைத்து நகரங்களிலும் கட்டுமான, இடிபாடுகளால் உண்டாகும் கழிவிலிருந்து மறு பயன்பாடு, மறு பயனீட்டை சிறந்த கட்டுமானங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

திடக் கழிவைக் கட்டுப்படுத்துவதற்கும் மறு பயன்பாடு, மறு பயனீடு செய்வதற்கும் வரிச் சலுகைகளை அளிப்பதற்கு முன்வர வேண்டும்.

 

கட்டுமான, இடிபாட்டுக் கழிவுகளைச் சேர்ப்பது, அவற்றை உரிய இடத்திற்குக் கொண்டு சேர்ப்பது, அவற்றிலிருந்து மறு பயன்பாடு, மறு பயனீடுக்கான பொருட்களைத் தயாரிப்பதில் தகுந்த தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டும்.

 

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067392