பூமியின் மேல் பகுதி ஏழு பெரிய தட்டுக்களாலும் (tectonoic plates) பல சிறிய தட்டுக்களாலும் ஆனது உள் பகுதி கொதிக்கும் குழம்பு நிலையான லாவாவால் ஆனது. இத்தட்டுக்களின் தடிமானம் ஏறத்தாழ 50 மைல்கள் இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.
இத்தட்டுக்களில் வட அமெரிக்கத் தட்டு, தென்அமெரிக்கத் தட்டு, ஆப்பிரிக்காத் தட்டு, யூரேசியன் தட்டு, பசிபிக் தட்டு, ஆஸ்திரேலியத் தட்டு, அண்டார்டிகா தட்டு ஆகிய ஏழும் பெரிய தட்டுகளாக இருக்கின்றன. (ஆஸ்திரேலிய-இந்தியத் தட்டில் நமது இந்தியா உள்ளது). இதில் கடலுக்கடியில் உள்ளதைக் கடல் தட்டு (oceamic plates) என்றும், நிலத்திற்கடியில் உள்ளதைக் கண்டத் தட்டு (continental plates) என்றும் ஆய்வாளர்கள் வகையிட்டுள்ளனர்.
இத்தட்டுகள் ஒன்றுக்கொன்று பல திசைகளில் ஓர் ஆண்டுக்குச் சில அங்குலங்கள் என நகர்ந்துகொண்டிருக்கின்றன. இவை நகர்வதால் ஒன்றுக்கொன்று இடித்துக்கொள்ளலாம் (convergent), இதில் கடல் தட்டும், கண்டத் தட்டும் மோதும்போது கடல் தட்டு கீழிறங்கிக் கடலில் ஆழமான பள்ளம் உருவாகிறது. கண்டத் தட்டும், கண்டத் தட்டும் மோதும் போது நிலம் உயர்ந்து மலைத்தொடர் உருவாகலாம்.
நிலநடுக்கம்
சில நேரங்களில் பூமித்தட்டுகள் ஒன்றுக்கொன்று விலகிச்செல்லலாம் (divregent). இதனால் இடைவெளி ஏற்பட்டு சூடான, பாறைக் குழம்பு (lava) பூமிக்கு உள்ளிருந்து வெளியே வந்து குளிர்ந்து தரை போல் ஆகிவிடும். இவ்வாறாகக் கடல் விரிவடைவதும்,கண்டங்கள் விலகுவதும் (continental drift) நடைபெறுகின்றன. மற்றொரு வகையில் பூமித்தட்டுகள் சமதளத்திலும் (transform-falut) நகரலாம்.
இதனால் தட்டுகளின் முனைப்பகுதி உரசி நிலநடுக்கம் ஏற்படுகிறது. பூமித் தட்டுக்குக் கீழே எரிமலைக் குழம்புகளில் கதிரியக்கப் பொருட்கள் அழிவினால் வெப்பம் உருவாக்கப்பட்டுப் பூமித் தட்டுகளை வெடிக்கச் செய்கிறது. இப்படிப் பிளவுகள் அதிகரித்து நிலப்பரப்பை அகற்றிப் பரப்புக்கிடையே பள்ளம் உருவாகிறது. தொடர்ந்து பிளவுறும் பகுதியில் கடல் நீர் உட்புகும் வாய்ப்புள்ளது.
பூகம்பங்களின் போது கட்டிடங்கள் பக்கவாட்டு அதிர்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுக் கட்டிடத்தின் பக்கங்கள் குவியலாகச் சரிகின்றன.
எப்படித் தடுக்கலாம்?
இதைத் தவிர்க்க உலக அளவில் சில பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன. கட்டிடம் பக்கவாட்டு அழுத்ததைத் தாங்கும் திறனை அனைத்துத் திசைகளிலும் பெறுதல் வேண்டும். பக்கவாட்டு அழுத்தத்தைப் பூமிக்குச் செலுத்தும் தன்மை பெறுதல் வேண்டும். தற்போதைய முறைகளுக்கு மாற்றான பக்கவாட்டு அழுத்ததைத் தாங்கும் உத்தி அமைக்க வேண்டும் (புவியியல் மண்டலத்தைப் பொறுத்து, சூழலுக்கு ஏற்ப). கட்டிடத்தின் அனைத்து பாகங்களும், அமைப்புகளும் சுமைகளைத் தாங்கும் திறன் பெறுதல், கட்டிடத்தின் அனைத்து அடி பாகங்களும், அமைப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்க பெறுதல் ஆகியவை வேண்டும். கட்டமைப்பில் கட்டுமான பலவீனம் ஏற்படாதவாறு தவிர்க்க வேண்டும்.
சுலபமாக உடையும் தன்மையுள்ள கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. புவியியல் மண்டலத்தைப் பொறுத்து, மண்ணின் தன்மைக்கு ஏற்ற, சூழலுக்கு உகந்த அஸ்திவாரத்தை அமைக்க வேண்டும். கட்டமைப்பில் உறுதியைத் தரும் சுவரை அமைக்க வேண்டும் (காங்கிரீட் சுவர், வங்கி பாதுகாப்பு அறை (safe room) லிப்ட் சுவரைப் போன்றது). திடீர் முடுக்கங்களைத் தாங்கும் திறன், அதற்கு இசைந்து கொடுக்கும் திறன் பெற்ற கூடு போன்ற அமைப்பு இருக்க வேண்டும்.
இது அழுத்தத்தையும், நெருக்கத்தையும், எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். நில நடுக்கத்தின் போது ஏற்படும் பக்கவாட்டு அதிர்வு, எதிர் முடுக்க அதிர்வு ஆகியவற்றால் கட்டிடத்தின் அமைப்புகள் உடையாமலும், சிதறாமலும், சுவர்கள் சரியாமலும் இருக்க, வணிகக் கட்டிடத்தைச் சுற்றித் திறந்த வெளி அமைக்கலாம் என்பது போன்ற சில யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
கட்டுமானத்தில் மாற்றம்
கட்டிடங்களுக்கான கம்பிகளை அதிகரிப்பதன் மூலம் அதிர்வைத் தாங்கும் வடிவமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அடித்தளத்தில் ரப்பர் மெத்தைகள் வைக்கும் யோசனையும் தற்போது ஆய்வில் இருக்கிறது. அடித்தளத்தில் நகரக்கூடிய சிறுசிறு சக்கரங்களைப் பொறுத்தி அதிர்வுகேற்ப கட்டிடம் இசைந்து நகரும் முறைகளும் சிலரால் முன் வைக்கப்படுகின்றன.
அடித்தளத்தில் அதிர்வுகேற்ப தாங்கும் ஹைட்ராலிக் ஜாக் பொருத்திப் பார்க்கப்படுகிறது. மர வீடுகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. கன்டெய்னர் வீடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்தியத் தர நிர்ணயக் கழகமும் நில நடுக்கத்தைத் தாங்கும் கட்டுமானத்துக்கான நெறிமுறையை வகுத்துள்ளது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066663
|